இது அநீதி, பொய், தீமைகளுக்கு எதிரான போராட்டம் அரியானாவில் பாஜ ஆட்சியை அகற்ற வேண்டும்: பிரியங்கா காந்தி பிரசாரம்

3 months ago 17

சண்டிகர்: அரியானாவில் பாஜ ஆட்சியை அகற்ற வேண்டும் என காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி பிரசாரம் செய்தார். அரியானாவில் மொத்தமுள்ள 90 பேரவை தொகுதிகளுக்கு நாளை மறுதினம் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அண்மையில் காங்கிரசில் இணைந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஜூலானா பேரவை தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி நேற்று ஜூலானா தொகுதியில் வினேஷ் போகத்துக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

அப்போது நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, “நாட்டில் தற்போது நிலங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் தொழில்சாலைகள் அனைத்தும் அதானி, அம்பானி போன்ற பெரிய தொழிலதிபர்களுக்கு தரப்பட்டு விட்டன. ஆனால் சிறு, குறு தொழில்கள் மற்றும் விவசாய துறைகளில் எந்த வேலை வாய்ப்பையும் உருவாக்க முடியவில்லை. ஒருசில தொழிலதிபர்களுக்காகவே இயங்கும் பாஜ அரசால் இளஞைர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியாது. ஏனெனில் பாஜவின் கொள்கைகள் சரியாக இல்லை. அக்னி வீரர் திட்டத்தால் ராணுவ வீரர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காது.

மேலும் நான்காண்டு பணியாற்றிபின் அவர்கள் மீண்டும் வேலை தேட வேண்டும். வௌிநாடுகளுக்கு செல்லும் மோடிக்கு டெல்லி எல்லையில் போராடிய விவசாயிகளை சந்திக்க நேரம் கிடைக்கவில்லை. விவசாயிகள், இளைஞர்கள், தொழிலாளர்கள், பெண்கள் உள்பட அனைவரும் கடந்த 10 ஆண்டுகளாக தவறாக வழி நடத்தப்படுவதை நீங்கள் பார்க்கிறீர்கள். அரியானா பாஜ அரசு மக்களுக்கு எந்த நன்மைகளையும் செய்யாமல் துரோகம் செய்து விட்டது. நடைபெறவுள்ள பேரவை தேர்தல் அநீதி, பொய், தீமைகளுக்கு எதிரான போர். மாநிலத்தில் பாஜ ஆட்சியை அகற்ற வேண்டும்” என இவ்வாறு தெரிவித்தார்.

The post இது அநீதி, பொய், தீமைகளுக்கு எதிரான போராட்டம் அரியானாவில் பாஜ ஆட்சியை அகற்ற வேண்டும்: பிரியங்கா காந்தி பிரசாரம் appeared first on Dinakaran.

Read Entire Article