இது அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி - ஹர்மன்ப்ரீத் கவுர்

5 hours ago 3

மும்பை,

3-வது மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை சந்தித்தது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் மெக் லானிங் பீல்டிங்கை தேர்வு செய்தார்.

இதன்படி முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹர்மன்ப்ரீத் கவுர் 66 ரன்களும், நாட் ஸ்கைவர்-பிரண்ட் 30 ரன்களும் அடித்தனர். டெல்லி அணி தரப்பில் மரிஜானே காப், ஜெஸ் ஜோனஸ்சென், ஸ்ரீ சரணி தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

இதைத்தொடர்ந்து 150 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி 9 விக்கெட்டுக்கு 141 ரன்களே எடுத்தது. இதனால் மும்பை அணி 8 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. டெல்லி தரப்பில் மரிசான்னே காப் 40 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 30 ரன்களும் அடித்தனர். மும்பை தரப்பில் நாட் ஸ்கைவர்-பிரண்ட் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகி விருதை ஹர்மன்ப்ரீத் கவுரும், தொடர் நாயகி விருதை ஸ்கைவர் பிரண்டும் கைப்பற்றினர். இந்நிலையில், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின் மும்பை கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அளித்த பேட்டியில் கூறியதாவது, இது அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. கடைசி பந்து வரை போராடிய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது.

பேட்டிங்கில் நாங்கள் நினைத்த மாதிரி தொடக்கம் கிடைக்கவில்லை. நான் இறங்கிய போது எதுவும் எளிதாக இருக்கவில்லை. நாட் ஸ்கைவர் (30 ரன்) களத்தில் இருக்கும் போது, நாம் அதிகமாக நெருக்கடிக்குள்ளாக வேண்டிய தேவையில்லை. அவர் நல்ல பார்மில் இருப்பதால் ஒன்று, இரண்டு ரன் வீதம் எடுத்து ஒத்துழைப்பு கொடுத்தால் போதும் என்று நினைத்து ஆடினேன்.

அது அந்த சமயம் பார்ட்னர்ஷிப்புக்கு உதவிகரமாக இருந்தது. டெல்லிக்கு எதிராக 149 ரன்கள் என்பது திருப்திகரமான ஸ்கோர் அல்ல. ஆனால் இது போன்ற அழுத்தமான ஆட்டத்தில் அது 180 ரன்கள் போல் தோன்றியது. எல்லா பெருமையும் பந்துவீச்சாளர்களையே சாரும்.

பவர் பிளேயில் விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை பந்து வீச்சாளர்களிடம் இருந்தது. அந்த வாய்ப்பை ஷப்னிம் இஸ்மாயிலும், நாட் ஸ்கைவரும் உருவாக்கியதுடன், ஆட்டத்தையும் எங்கள் பக்கம் கொண்டு வந்தார்கள். அணியில் ஒவ்வொரு பவுலரும் பந்து வீசிய விதத்தை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article