சேலம்: இடைப்பாடியில் தனியார் பள்ளி வேனில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 9ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தான். இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகேயுள்ள வெள்ளாண்டிவலசு நடுத்தெருவை சேர்ந்தவர் அழகுராஜா (40), நெசவு தொழிலாளி. இவரது மகன் கந்தகுரு (14), இவர், இடைப்பாடி தாவாந்தெருவில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் பள்ளியில் ஆண்டுவிழா நடந்துள்ளது. அப்போது உடன் படிக்கும் மாணவன் ஒருவருடன் கந்தகுருவிற்கு தகராறு ஏற்பட்டுள்ளது. அங்கு சக மாணவர்கள் அவர்களை விலக்கி விட்டு, சமாதானப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து, தான் வழக்கமாக செல்லும் பள்ளி வேனில் ஏறி கந்தகுரு பயணித்தார். அதே வேனில் தகராறில் ஈடுபட்ட மாணவனும் வந்துள்ளார். பள்ளி வேனை ரித்திக்குமார் (25) என்ற டிரைவர் ஓட்டிச் சென்றார். வெள்ளாண்டிவலசு பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, வேனுக்குள் மாணவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இருவரும் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டுள்ளனர்.உடனே சாலையோரத்தில் பள்ளி வேனை டிரைவர் ரித்திக்குமார் நிறுத்தினார். அந்த நேரத்தில் தாக்குதலில் ஈடுபட்ட மாணவன், கந்தகுருவின் கழுத்தை பிடித்து கீழே தள்ளிவிட்டுள்ளார். இதில், பின்தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, மயக்க நிலைக்கு மாணவன் கந்தகுரு சென்று விட்டார். உடனே டிரைவர் மற்றும் சக மாணவர்கள், கந்தகுருவை மீட்டு, அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி மாணவன் கந்தகுரு பரிதாபமாக உயிரிழந்தான்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார், பள்ளிக்கு சென்றும், மோதல் நடந்தபோது உடனிருந்தவர்களிடமும் விசாரித்தனர். அப்போது இறந்த மாணவன் கந்தகுருவிற்கும், மோதலில் ஈடுபட்ட மாணவனுக்கும் இடையே முதலில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பெற்றோர் குறித்து தவறாக பேசியதால், ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டுள்ளனர். அதில், தலையில் காயமடைந்த மாணவன் கந்தகுரு இறந்திருப்பது தெரியவந்துள்ளது. கொலை செய்யும் நோக்கம் ஏதும் இன்றி, திடீரென ஏற்பட்ட மோதலில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருப்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர். அதனால், கொலை நோக்கமில்லாத மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதனிடையே இச்சம்பவம் நடந்த பள்ளி மற்றும் இறந்த மாணவன் வசிக்கும் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இறந்த மாணவன் கந்தகுருவின் உடல், இன்று பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. அதற்கான ஏற்பாட்டை போலீசார் செய்துள்ளனர். இச்சம்பவம் இடைப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post இடைப்பாடியில் தனியார் பள்ளி வேனில் மாணவர்கள் மோதலில் 9ம் வகுப்பு மாணவன் சாவு: போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.