*2 தளங்களுடன் அமைகிறது; கட்டுமான பணிகள் மும்முரம்
பவானி : இட நெருக்கடிக்கு நிரந்தரமாக தீர்வு காணும் வகையில், ஜம்பை பேரூராட்சி அலுவலகத்திற்கு ரூ.1.14 கோடியில் 2 தளங்களுடன் புதிய அலுவலக கட்டிடம் கட்டும் பணிகள் துவங்கப்பட்டு, மும்முரமாக நடைபெற்று வருகிறது.ஈரோடு மாவட்டம், பவானி – அத்தாணி ரோட்டில் ஜம்பை பேரூராட்சி அமைந்து உள்ளது. 14.29 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. பவானி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இப்பேரூராட்சியில் 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களை கொண்டது.
2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பேரூராட்சியில் 4,789 வீடுகளும், 16,522 பேர் கொண்ட மக்கள் தொகையும் கொண்டது. பேரூராட்சி அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு நீண்ட காலமானதால் பழுதடைந்தும், இட நெருக்கடியிலும் செயல்பட்டு வந்தது.
இதனால், இந்த கட்டிடங்களை இடித்துவிட்டு, புதிதாக அலுவலக கட்டிடம் கட்ட வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு பேரூராட்சி தலைவரும், திமுக பேரூர் செயலாளருமான என்.ஆனந்தகுமார் மற்றும் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து, மூலதன மானிய நிதி 2024-25 திட்டத்தின் கீழ் ரூ.1.14 கோடியில் பணிகளை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அனுமதி வழங்கியது.
ஓராண்டுக்குள் அலுவலக கட்டிடப்பணிகளை முடிக்கும் வகையில் கடந்த ஆகஸ்ட் 2024-ல் கட்டுமான வேலைகள் தொடங்கப்பட்டது. தர்மபுரி அரசு பொறியியல் கல்லூரியின் கட்டுமானப் பொறியியல் துறை தலைவர் ராஜ்குமார் தலைமையில் வல்லுநர் குழுவினர் மண் பரிசோதனை மற்றும் கட்டிடத்தின் ஸ்திரத்தன்மை குறித்து வடிவமைப்பு ஆலோசனைகளை வழங்கி உள்ளனர்.
இந்த அலுவலகத்திற்கு தரைத்தளம் 2,419 சதுர அடி பரப்பளவும், மேல் தளம் 1,527 சதுர அடி பரப்பிலும் கட்டப்படுகிறது. பாறைகள் அதிகளவில் காணப்பட்ட இப்பகுதியில், தேவைப்படும் இடங்களில் வெடி வைத்து தகர்க்கப்பட்டு, அடித்தளமிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கட்டிங்களைத் தாங்கும் வகையில் 28 தூண்கள் அமைப்பதற்கான பணி தொடங்கப்பட்டு மும்முரமாக நடைபெற்று வருகிறது.இதுகுறித்து, ஜம்பை பேரூராட்சி தலைவர் என்.ஆனந்தகுமார் கூறுகையில், ‘‘பேரூராட்சி அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு நீண்ட காலமானதால் பழுதடைந்து காணப்பட்டது. மேலும், அலுவலகப் பணிகளுக்கான இட நெருக்கடியும் இருந்தது.
இதனால், புதிய, விசாலமான அலுவலக கட்டிடம் கட்ட வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன்பேரில், நிதி ஒதுக்கப்பட்டதால் தற்போது பணிகள் தொடங்கப்பட்டு மும்முரமாக நடைபெற்று வருகிறது. அலுவலகத்திற்கு தேவையான வசதிகளுடன் 2 தளங்களாக கட்டப்படுகிறது. இப்பணிகள் நிறைவடைந்தால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்’’ என தெரிவித்தார்.
The post இட நெருக்கடிக்கு நிரந்தரமாக தீர்வு ஜம்பை பேரூராட்சி அலுவலகத்திற்கு ரூ.1.14 கோடியில் புதிய கட்டிடங்கள் appeared first on Dinakaran.