
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற ஜூன் 20-ம் தேதி தொடங்க உள்ளது. 2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக நடைபெறும் இந்த தொடரில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி வரும் 23-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவிக்க பி.சி.சி.ஐ. முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்த தொடரில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி இடம்பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் கடந்த ஒருநாள் உலக்கோப்பை தொடரில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் நீண்ட நாள் கழித்து உள்ளூர் தொடர்களில் களமிறங்கினார். ஆனாலும் அவரால் முன்புபோல் அசத்த முடியவில்லை.
அவர் கிரிக்கெட்டுக்கு திரும்பி வந்து பல மாதங்களாகிவிட்டன. ஆனால் அவர் பார்முக்கு வரவில்லை. பொதுவாக இந்திய அணி தேர்வுக்கு ஐ.பி.எல். செயல்திறன் கருதப்படுவதில்லை என்றாலும், ஷமி தனது ரன்-அப்பை முடிக்க சிரமப்படுகிறார். மேலும் அவர் வீசும் பந்துகள் பெரும்பாலும் விக்கெட் கீப்பருக்கு வேகமாக சென்று சேர்வதில்லை. அவர் காயத்தில் இருந்து குணமடைந்து விட்டாலும் செயல்பாடு மந்தமாகவே இருந்து வருகிறது. எனவே அவரை தேர்வு செய்ய இந்திய தேர்வுக்குழு தயக்கம் காட்டுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.