
சென்னை,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி அண்மையில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடியது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரில் 1-4 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் (0-3) தோல்வியையும் இங்கிலாந்து சந்தித்தது.
முன்னதாக இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் ஆன பென் டக்கெட் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் தோல்வியை சந்தித்தாலும் கவலையில்லை என்று 3-வது போட்டிக்கு முன்னதாக கூறினார். ஏனெனில் சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவை தோற்கடிக்கும் திறமை தங்களிடம் இருப்பதாகவும் கூறினார். இறுதியில் அவர் கூறியது போலவே இந்தியாவுக்கு எதிராக அவர்கள் ஒயிட்வாஷ் தோல்வியை சந்தித்தனர்.
இந்நிலையில் கடந்த 4 வருடங்களாகவே ஒருநாள் கிரிக்கெட்டில் சுமாராக விளையாடும் இங்கிலாந்து அணியினர் இப்படி இந்தியாவை கிண்டலடிப்பது சரியல்ல என அவருக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து அஸ்வின் பேசியது பின்வருமாறு:- "பென் டக்கெட் என்ன சொன்னாலும் சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பாக சந்தித்த இந்த தோல்வி இங்கிலாந்து அணியின் தன்னம்பிக்கையை வெகுவாக குறைத்திருக்கும். கடந்த வருடமும் அவர் இதே போன்ற ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். குறிப்பாக இங்கிலாந்தின் பேஸ்பால் ஸ்டைலை பார்த்துதான் ஜெய்ஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடுவதாக அவர் கூறினார்.
அந்த வகையில் பென் டக்கெட் பற்றியும் அவருடைய நகைச்சுவை தன்மை பற்றியும் எனக்குத் தெரியும். ஆனால் இது நகைச்சுவை அல்ல. நீங்கள் உங்களுடைய தோல்வியை நகைச்சுவைக்குப் பின் ஒழித்து வைக்கிறீர்கள். கடந்த ஒருநாள் உலகக்கோப்பையும் உங்களுக்கு மோசமாகவே சென்றது நீங்கள் 2 - 3 மாதங்கள் மட்டுமல்ல நான்கு வருடங்களாகவே சுமாரான பார்மில் இருக்கிறீர்கள். இத்தனைக்கும் நல்ல திறமை இருந்தும் அதற்குத் தகுந்தாற்போல் நீங்கள் விளையாடவில்லை" என்று பதிலடி கொடுத்துள்ளார்.