
பர்மிங்காம்,
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.
அதன்படி இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் ஆன ஜேமி சுமித் 24 பந்துகளில் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்களும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்து இங்கிலாந்து இமாலய இலக்கை நோக்கி பயணித்தது.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து 400 ரன்கள் குவித்து அசத்தியது. இங்கிலாந்து தரப்பில் ஜேக்கப் பெத்தேல் (82 ரன்கள்), பென் டக்கெட் (60 ரன்கள்), ஹாரி புரூக் (58 ரன்கள்) மற்றும் ஜோ ரூட் (57 ரன்கள்) ஆகிய 4 வீரர்கள் அரைசதம் அடித்து அசத்தினர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 401 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விரைவாக விக்கெட்டுகளை இழந்து ஆல் அவுட் ஆனது. வெறும் 26.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த வெஸ்ட் இண்டீஸ் 162 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி இங்கிலாந்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
வெஸ் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 29 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் சகிப் மக்மூத் மற்றும் ஜேமி ஓவர்டான் தலா 3 விக்கெட்டுகளும், அடில் ரஷித் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.