லண்டன்: 2025 சாம்பியன்ஸ் டிராபியில் இங்கிலாந்து அணியின் மோசமான செயல்பாட்டிற்குப் பிறகு, ஜோஸ் பட்லர், கேப்டன் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, இங்கிலாந்து ODI மற்றும் டி20 அணியின் புதிய கேப்டனாக ஹாரி ப்ரூக் நியமிக்கப்பட்டுள்ளார்.
26 வயதான புரூக், கடந்த ஒரு வருடமாக இங்கிலாந்து அணியின் துணை கேப்டனாக இருந்து வருகிறார், மேலும் கடந்த ஆண்டு செப்டம்பரில் பட்லர் இல்லாத நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் இங்கிலாந்தை வழிநடத்தினார். இந்நிலையில் மே மாத இறுதியில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் முழுநேர கேப்டனாக முதல் முறையாக இங்கிலாந்தை வழிநடத்த உள்ளார்.
“இது எனக்கு பெருமை சேர்க்கும் விஷயம். சிறுவயதிலிருந்தே இங்கிலாந்துக்காக விளையாடுவது, ஒரு நாள் போட்டிக்கான கேப்டனாக இருப்பது பற்றி யோசித்தேன், இப்போது இந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்திருப்பது ஒரு பெரிய விஷயம். இதற்கான பெருமை என் குடும்பத்தினருக்கும் பயிற்சியாளர்களுக்கும் சேரும், அவர்கள் இல்லாமல் நான் இன்று இங்கே இருக்க மாட்டேன்” என்று புரூக் கூறியுள்ளார்.
2022 இல் அறிமுகமானதிலிருந்து, புரூக் இங்கிலாந்து அணியில் அனைத்து வடிவங்களிலும் ஒரு முக்கிய வீரராக இருந்து வருகிறார். டெஸ்ட் போட்டிகளில், ஜோ ரூட்டுக்குப் பிறகு தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் புரூக் இருந்தார், ஆனால் வரும் 12 மாதங்களில் இங்கிலாந்தின் அட்டவணையை காரணம் காட்டி தனது பெயரை வாபஸ் பெற்றார். இங்கிலாந்து அணி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. மேலும் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் டி20 உலகக் கோப்பையும் நடைபெற உள்ளது.
புரூக் இதுவரை இங்கிலாந்துக்காக 26 ஒருநாள் போட்டிகளில் 34 சராசரியுடன் 826 ரன்கள் எடுத்துள்ளார். 44 டி20 போட்டிகளில், அவர் 28.50 சராசரியுடன் விளையாடியுள்ளார். இதில் 81 நாட் அவுட் அவரது சிறந்த ரன்னாகும். ஆஸ்திரேலியாவில் 2022 டி20 உலகக் கோப்பையை வென்ற அணியிலும் அவர் இடம் பெற்றிருந்தார்.
The post இங்கிலாந்து ODI மற்றும் டி20 அணியின் புதிய கேப்டனாக ஹாரி ப்ரூக் நியமனம்! appeared first on Dinakaran.