கேப்டவுன்,
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் வரும் ஜூன் மாதம் 11-15 வரை நடக்கிறது. இந்தப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இதில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா கோப்பையை தக்க வைக்க போராடும். அதே வேளையில் முதல் முறையாக கோப்பையை கைப்பற்ற தென் ஆப்பிரிக்கா முயற்சிக்கும்.
இந்நிலையில், எதிர்வரும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை எப்படி வீழ்த்துவது என்பது எங்களுக்கு தெரியும் என தென் ஆப்பிரிக்கா வீரர் ககிசோ ரபாடா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இன்னும் தொலைவில் இருக்கக்கூடிய ஒரு விஷயம். ஆனால் இப்படியான ஒரு இறுதிப் போட்டி மிகப்பெரிய நிகழ்வு. எனவே அது உங்களை தூண்டவே செய்யும்.
தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு நடுவில் எப்பொழுதும் கடுமையான போட்டி இருந்து வருகிறது. ஏனென்றால் நாங்கள் கிரிக்கெட்டை ஒரே மாதிரி விளையாடுகிறோம். நாங்கள் கடினமாக விளையாடுகிறோம். எனவே அவர்கள் எங்களிடம் மிகக் கடினமாக மோத வருவார்கள் என்று எங்களுக்கு தெரியும். 100 சதவீதம் டெஸ்ட் கிரிக்கெட் உயிருடன் இருக்கிறது. நாங்கள் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி வருகிறோம்.
எங்களுடைய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றை எடுத்துப் பார்த்தால், எங்களுடைய ஜாம்பவான் வீரர்கள் அனைவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் சிறந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். மேலும், பாகிஸ்தான் அணிக்கு எதிராக நாங்கள் உள்நாட்டில் விளையாடிய டெஸ்ட் தொடர் சிறந்த விளம்பரமாக அமைந்தது. ஆஸ்திரேலியா அணியை எப்படி வீழ்த்துவது? என்று எங்களுக்கு தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.