ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்; 2வது இன்னிங்சில் முன்னிலை பெற்ற இலங்கை

3 hours ago 2

காலே,

இலங்கை - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த இலங்கை தனது முதல் இன்னிங்சில் 257 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக குசல் மெண்டிஸ் 85 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க், குனமென், நாதன் லயன் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் சுமித் மற்றும் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி சதமடித்து அசத்தினர். இதன் மூலம் ஆஸ்திரேலியா நேற்றைய 2ம் நாள் முடிவில் 80 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 330 ரன்கள் குவித்திருந்தது. இதன் காரணமாக ஆஸ்திரேலியா நேற்றைய முடிவில் 73 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. அலெக்ஸ் கேரி 139 ரன்களுடனும், ஸ்டீவ் ஸ்மித் 120 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதையடுத்து, இன்று 3வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து அலெக்ஸ் கேரி, ஸ்மித் நிலைத்து ஆடினர். இதில் ஸ்மித் 131 ரன்களும், அலெக்ஸ் கேரி 156 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களம் இறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர் . இதனால் ஆஸ்திரலிய அணி 414 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி 157 ரன்கள் முன்னிலை பெற்றது. இலங்கை அணி சார்பில் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்ந்து 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணியில் பதும் நிசாங்கா 8 ரன், திமுத் கருணாரத்னே 14 ரன், தினேஷ் சண்டிமால் 12 ரன் காமிந்து மெண்டிஸ் 14 ரன், தனஞ்செயா டி சில்வா 23 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் குசல் மெண்டிஸ் ஜோடி சேர்ந்தனர்.

இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இதில் மேத்யூஸ் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 76 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் 3ம் நாள் முடிவில் இலங்கை தனது 2வது இன்னிங்சில் 62.1 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 211 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் இலங்கை தற்போது வரை 54 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இலங்கை தரப்பில் குசல் மெண்டிஸ் 48 ரன்னுடன் களத்தில் உள்ளார். ஆஸ்திரேலியா தரப்பில் குனமென் 4 விக்கெட்டும், நாதன் லயன் 3 விக்கெட்டும், பியூ வெப்ஸ்டர் 1 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளனர். நாளை 4ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

Read Entire Article