
சிட்னி,
ஆஸ்திரேலியாவில் வொம்பாட் என்ற பாலூட்டி விலங்கு உள்ளது. அந்நாட்டில் மட்டுமே காணப்படும் இந்த விலங்கு குறைவான எண்ணிக்கையில் உள்ளதால் அரியவகை விலங்காக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, அமெரிக்காவை சேர்ந்த சமூகவலைதள பிரபலம் சாம் ஜோன்ஸ். இளம்பெண்ணான இவர் வெவ்வேறு நாடுகளுக்கு சென்று அது தொடர்பான வீடியோக்களை தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டு பிரபலமானார். இவர் தனது தாயாருடன் கடந்த சில நாட்களுக்குமுன் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்குமுன் ஆஸ்திரேலியாவின் வனப்பகுதியில் உள்ள சாலையில் இரவு நேரத்தில் சாம் ஜோன்ஸ் தனது தாயாருடன் காரில் சென்றுள்ளார். அப்போது, வனப்பகுதியில் வொம்பாட் விலங்கு தனது குட்டியுடன் சாலையை கடந்துள்ளது. இதைப்பார்த்த சாம் ஜோன்ஸ் காரில் இருந்து இறங்கிய வொம்பாட் குட்டியை பிடித்துள்ளார். தாயிடமிருந்து பிரிந்த வொம்பாட் குட்டி கத்தியுள்ளது.
வொம்பாட் குட்டியை தேடி அதன் தாய் சாம் ஜோன்சின் காரை நோக்கி வந்துள்ளது. ஆனால், அந்த தாய் வொம்பாட்டை சாம் ஜோன்ஸ் விரட்டியுள்ளார். பின்னர், வொம்பாட் குட்டியை சாலையோரம் வனப்பகுதியில் ஜோன்ஸ் விட்டார். பின்னர், அந்த குட்டி வனப்பகுதியில் ஓட்டியது. இந்த நிகழ்வை தனது சொல்போனில் வீடியோவாக எடுத்த சாம் ஜோன்ஸ் அதை சமூகவலைதளத்தில் பதிவிட்டார்.
இது ஆஸ்திரேலியாவில் பெரும் பேசுபொருளானது. அரியவகை உயிரினமான வொம்பாட்டை தனது குட்டியிடமிருந்து பிரித்தது, குட்டியை தனியே வனப்பகுதியில் விட்டது தொடர்பாக சாம் ஜோன்சுக்கு கண்டனம் எழுந்தது.
இதையடுத்து, ஜோன்ஸ் மற்றும் அவரின் தாயாரின் விசாவை ரத்து செய்த ஆஸ்திரேலிய அரசு இருவரையும் நாட்டை விட்டு வெளியேற்றியது. இருவரும் தற்போது அமெரிக்கா சென்றுவிட்டனர்.