ஆஸ்திரேலியா ஏ அணிக்கு வெற்றி வாய்ப்பு: கடைசி நாளில் சாதிக்குமா இந்தியா ஏ

2 weeks ago 4

மெக்கே: இந்தியா ஏ அணியுடனான முதல் டெஸ்டில் (அதிகாரப்பூர்வமற்றது), 225 ரன் வெற்றி இலக்கை துரத்தும் ஆஸ்திரேலியா ஏ அணி 3 விக்கெட் இழப்புக்கு 139 ரன் எடுத்துள்ளது. கிரேட் பேரியர் ரீஃப் அரங்கில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஏ அணி முதலில் பந்துவீசியது. இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சில் வெறும் 107 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது (47.4 ஓவர்). தேவ்தத் படிக்கல் 36, நவ்தீப் சைனி 23, சாய் சுதர்சன் 21 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் பெவிலியன் திரும்பினர் (3 பேர் டக் அவுட்).

ஆஸ்திரேலியா ஏ பந்துவீச்சில் பிரெண்டன் டாக்கெட் 6 விக்கெட் கைப்பற்றினார். அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா ஏ அணி முதல் இன்னிங்சில் 195 ரன்னுக்கு சுருண்டது. கேப்டன் மெக்ஸ்வீனி அதிகபட்சமாக 39 ரன் விளாசினார். கூப்பர் 37, வெப்ஸ்டர், டாட் மர்பி தலா 33 ரன் எடுக்க, மற்றவர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். இந்தியா ஏ பந்துவீச்சில் முகேஷ் குமார் 6, பிரசித் கிருஷ்ணா 3, நிதிஷ் குமார் 1 விக்கெட் வீழ்த்தினர்.

88 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஏ அணி, 2வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 208 ரன் எடுத்திருந்தது. சாய் சுதர்சன் 96 ரன், தேவ்தத் படிக்கல் 80 ரன்னுடன் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். சாய் சுதர்சன் 103 ரன் (200 பந்து, 9 பவுண்டரி), படிக்கல் 88 ரன் (199 பந்து, 6 பவுண்டரி) விளாசி டாட் மர்பி பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது இந்தியா ஏ அணிக்கு பின்னடைவை கொடுத்தது.

அடுத்து வந்த வீரர்களில் இஷான் கிஷன் 32, நிதிஷ் குமார் 17 ரன், மானவ் சுதர் 6 ரன் எடுக்க… பிரசித், முகேஷ் டக் அவுட்டாகினர். இந்தியா ஏ 2வது இன்னிங்சில் 312 ரன் குவித்து அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது. நவ்தீப் சைனி 18 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலியா ஏ பந்துவீச்சில் பெர்குஸ் ஓ’நீல் 4, மர்பி 3, டாக்கெட், வெப்ஸ்டர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 225 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குய ஆஸ்திரேலியா ஏ அணி, 3,ம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 139 ரன் எடுத்துள்ளது.

சாம் கோன்டாஸ் 16, மார்கஸ் ஹாரிஸ் 36, பேங்க்ராப்ட் 16 ரன்னில் பெவிலியன் திரும்பினர். கேப்டன் நாதன் மெக்ஸ்வீனி 47 ரன், பியூ வெப்ஸ்டர் 19 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 7 விக்கெட் இருக்க, ஆஸி. ஏ அணி வெற்றிக்கு இன்னும் 86 ரன் மட்டுமே தேவை என்ற நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.

The post ஆஸ்திரேலியா ஏ அணிக்கு வெற்றி வாய்ப்பு: கடைசி நாளில் சாதிக்குமா இந்தியா ஏ appeared first on Dinakaran.

Read Entire Article