மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காயத்திலிருந்து குணமடைந்த முன்னணி வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரான ஷர்துல் தாகூருக்கு இடம் கிடைக்கவில்லை.
இந்நிலையில் ஆஸ்திரேலியா தொடருக்காக நான் தேர்வு செய்யப்படாதது குறித்து வருத்தத்துடன் பேசியுள்ள ஷர்துல் தாகூர் கூறுகையில், "ஆஸ்திரேலியா தொடர் குறித்து யாரும் என்னிடம் தொடர்பு கொண்டு பேசவில்லை. நான் அறுவை சிகிச்சை செய்து கொண்டு தற்போது நல்ல முறையில் திரும்பி விட்டேன். ஆனாலும் எனக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை என்பது நிதர்சனமான உண்மை. இருந்தபோதிலும் அறுவை சிகிச்சைக்கு பின்னர் தற்போது நான் சிறந்த முறையில் மீண்டும் தயாராகி உள்ளேன். கடந்த சில மாதங்களாக நான் பந்துவீச்சிலும் சிறப்பாக முன்னேறி வருகிறேன்.
என்னுடைய உடற்பகுதி முன்பை விட சிறப்பாக இருக்கிறது. ஆஸ்திரேலியா தொடர் என்பது மிகவும் பெரிய தொடர். எனவே அங்கிருந்து எப்போது வேண்டுமானாலும் எனக்கு அழைப்பு வரலாம். அதேபோன்று இங்கிலாந்து அணி இங்கு வந்து இந்திய மண்ணில் விளையாட இருக்கிறது. அதற்கு அடுத்து சாம்பியன்ஸ் டிராபி தொடர் இருக்கிறது இப்படி அடுத்தடுத்த பெரிய தொடர்கள் இருப்பதால் நிச்சயம் ஏதாவது ஒரு தொடரில் எனக்கு வாய்ப்பு கிடைக்கும்" என்று கூறினார்.