மெல்போர்ன்,
இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ அணிகள் இடையிலான 2-வது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டி(4 நாள் ஆட்டம்) மெல்போர்னில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இந்தியா ஏ அணியில் கே.எல். ராகுல் மற்றும் துருவ் ஜூரல் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணிக்கு தேர்வாகியிருக்கும் இவர்கள் பயிற்சி மேற்கொள்ளும் விதமாக பி.சி.சி.ஐ. இந்த முடிவை எடுத்துள்ளது.
அதன்படி இன்று தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய ஏ அணியின் கேப்டன் நாதன் மெக்ஸ்வீனி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஏ அணியில் அபிமன்யூ ஈஸ்வரன் மற்றும் சாய் சுதர்சன் டக் அவுட்டிலும், கெய்க்வாட் மற்றும் ராகுல் தலா 4 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். பின்னர் படிக்கலுடன் ஜோடி சேர்ந்த ஜூரல் பொறுப்புடன் விளையாடி அணியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
படிக்கல் 26 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி மீண்டும் சரிவை கண்டது. ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜூரல் 80 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
முடிவில் இந்தியா ஏ முதல் இன்னிங்சில் 161 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய தரப்பில் நேசர் 4 விக்கெட்டுகளும், வெப்ஸ்டர் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா ஏ முதல் நாளில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 53 ரன்கள் அடித்துள்ளது.