சென்னை,
ஏழை, எளிய மக்களை நேரடியாக பாதிக்கும் பால் விலையை உயர்த்தும் முடிவை ஆவின் நிர்வாகம் கைவிட வேண்டும் என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் மூலம் விற்பனை செய்யப்படும் பச்சை நிற பால் பாக்கெட்டில் Green Plus எனும் பெயரை Green Magic Plus என மாற்றி 500 மி.லி எடை கொண்ட பாலை 450 மி.லிட்டராக குறைப்பதோடு அதன் விலையை லிட்டருக்கு 11 ரூபாய் வரை உயர்த்த திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் பால் மற்றும் பால் பொருட்களின் விலையை பலமுறை உயர்த்திய தி.மு.க. அரசு, பாலின் தரத்தை உயர்த்தாமல் பெயரை மட்டும் மாற்றி ஆண்டுக்கு ஒருமுறை மறைமுகமாக விலையை உயர்த்துவதோடு, அதன் எடையையும் குறைக்க திட்டமிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்ற பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை தற்போது வரை நிறைவேற்றப்படாத நிலையில், பால் பாக்கெட்டுகளின் எடை மற்றும் கொழுப்புச் சத்தை குறைத்து அதன் விலையை உயர்த்தும் முடிவை ஆவின் நிர்வாகம் கைவிட வேண்டும் என பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
எனவே, ஏழை, எளிய மக்களை நேரடியாக பாதிக்கும் பால் விலையை உயர்த்தும் முடிவை கைவிடுவதோடு, ஆவின் நிர்வாகத்தின் வருவாயைப் பெருக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.