திருவள்ளூர்,
ஆவடி அருகே திருமுல்லைவாயிலில் அழுகிய நிலையில் தந்தை மற்றும் மகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாமுவேல் சங்கர் (70 வயது). சிறுநீரக கோளாறு காரணமாக பாதிக்கப்பட்ட அவர், தனது மகளுடன் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே திருமுல்லைவாயிலில் வீடு எடுத்து தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அவரது வீடு பூட்டியிருந்த நிலையில், உள்ளிருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது சாமுவேல் மற்றும் அவரது மகள் இருவரும் இறந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளனர்.
அழுகிய நிலையில் இருந்த இருவரின் உடல்களையும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சாமுவேல் சங்கருக்கு டயாலிசிஸ் சிகிச்சை செய்துவந்த மருத்துவர் சாமுவேல் எபனேசர் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு சிகிச்சையின்போது சாமுவேல் சங்கர் இறந்துள்ளார். இது தொடர்பாக அவரது மகள், மருத்துவர் எபனேசருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவரை எபனேசர் தள்ளிவிட்டதில் அவர் உயிரிழந்துள்ளார். இதனால் அச்சமடைந்த மருத்துவர் எபனேசர் வீட்டை பூட்டிவிட்டு சென்றதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.