வைகுண்டம், அக்.14: ஆழ்வார்திருநகரியில் இருந்து காடுவெட்டி செல்லும் சாலையோர பள்ளத்தால் விபத்து அபாயம் காணப்படுகிறது. இதனை உடனடியாக சீரமைக்க வேண்டுமென வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆழ்வார்திருநகரியில் இருந்து ஆழ்வார்தோப்பு வழியாக காடுவெட்டி செல்லும் சாலையில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக, பேரூர் ஆயத்துறையில் இருந்து காடுவெட்டி வழியாக ஆழ்வார்திருநகரி -திருச்செந்தூர் சாலையை சென்றடைய தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களும், கார் மற்றும் வேன்களும் அதிகளவில் சென்று திரும்புகின்றன.
இச்சாலை வழியாக தினமும் கல் குவாரிகளில் இருந்து வந்து செல்லும் கனரக லாரிகளும், தற்போது மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியோடு குளங்களில் இருந்து விவசாய நிலங்களை மேம்படுத்த வண்டல் மண் அள்ளிச் செல்லும் வாகனங்களும் காடுவெட்டி -ஆழ்வார்திருநகரி சாலையை பயன்படுத்தி வருகின்றன. மேலும் நவதிருப்பதி கோயில்களில் ஆழ்வார்திருநகரியில் இருந்து இரட்டை திருப்பதி, பெருங்குளம் கோயில்களுக்கு செல்லும் பக்தர்களும் வாகனங்களில் இந்த சாலை வழியாகவே சென்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழைக்கு பிறகு காடுவெட்டி பாலம் அருகே சாலையோரத்தில் அரிப்பு ஏற்பட்டு தற்போது மிகப்பெரிய பள்ளமாக காட்சியளிக்கிறது.
இதனை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், வாகன ஓட்டுநர்கள் விபத்து அபாயத்தில் அச்சத்துடனே சென்று வருகின்றனர். இரவு நேரங்களில் பயணிக்கும் வாகன ஓட்டுநர்களுக்கு இந்தப் பள்ளம் தெரிவதில்லை. எனவே வாகனங்கள் விபத்தில் சிக்கி உயிர் சேதம் ஏற்படும் முன்பு சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்களின் கோரிக்கையாக உள்ளது.
The post ஆழ்வார்திருநகரி – காடுவெட்டி இடையே சாலையோர பள்ளத்தால் விபத்து அபாயம் appeared first on Dinakaran.