சென்னை: மத்தியகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில், அடுத்த 6 நாட்களுக்கு பரவலாக மழையும், ஒருசில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை (அக்.22) திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. கர்நாடகா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. நேற்று (அக்.20) வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று காலை (அக்.21) 5.30 மணி அளவில் மத்தியகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 22-ம் தேதி காலை, மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 23-ம் தேதி வாக்கில் புயலாக வலுபெறக்கூடும். அதன் பிறகு, இது வடமேற்கு திசையில் நகர்ந்து, 24-ம் தேதி காலை, வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒடிசா – மேற்கு வங்க கடற்கரை பகுதிகளை அடையக்கூடும்.