ஆளுமை மிக்கவராக திகழுங்கள்

4 hours ago 1

தன்னைத்தானே ஊக்குவித்துக்கொண்டு செயலாற்றுபவர்களே இமாலய சாதனை படைக்கின்றார்கள். நமதுநற்செயல்களுக்கு மற்றவர்களின் பாராட்டுகளையோ, அங்கீகாரத்தையோ எதிர்பார்த்து காத்துக் கிடக்ககூடாது. அவ்வாறான மனநிலை ஏக்கத்தையும் ஏமாற்றத்தையும்தான் கொடுக்கும். அதற்குப் பதிலாக நமக்கு நாமே ஒரு சபாஷ் சொல்லிக்கொண்டு தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அதாவது நம்மை நாமே தொடர்ந்து ஊக்குவித்துக் கொண்டே இருக்க வேண்டும். முயற்சி தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் தொடர்ந்து நம்மை நாமே ஊக்குவித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது மிக மிக அவசியம்.ஊக்குவிப்பு உழைப்பை உத்வேகப் படுத்தும் என்பதுடன் உள்ளம் நிறைய புத்துணர்வையும் புதுத்தெம்பையும் உண்டாக்கும்.நாம் ஒன்றும் நாடறிந்த பிரபலம் அல்ல, ஒரு ஊரில் வீடு, அலுவலகம் வழக்கமாய் போய் வருகிற சில இடங்கள் இவற்றை விட்டால் வேறு எதுவும் இல்லாத சின்னஞ்சிறியதோர் உலகம் நம்முடையது. யாராவது ஒருவருடைய பார்வை நம்மீது பதியத்தான் செய்யும். ‘யாரோ நம்மைப் பார்க்கிறார்கள்’ என்கிற உணர்வு உங்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே இருக்கத்தான் செய்யும்.எனவே விழிப்புணர்வோடு, ஒருவிரும்பத்தக்க மனிதர் இவர் என்கிற தோற்றத்தை நீங்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு அறையில் சிலர் அமர்ந்திருக்கிறார்கள்.ஒருவர் சற்றே குனிந்த தலையுடன் முதுகை வளைத்துக் கொண்டு விறுவிறுவென்று உள்ளே வருகிறார். அவர்களைக் கடந்து போகிறார். ஆனால் அவரை திரும்பிக் கூடப் பார்க்காமல் எதுவும் நடவாதது போல் மற்றவர்கள் இருந்து விடுகிறார்கள். சில நிமிடங்களில் மற்றொருவர் அந்த அறைக்குள் நுழைகிறார். அவர் நறுமணம் விசும் தோற்றத்தில் நேர்த்தியான உடை அணிந்து, அடிகளை ஒரே சீரில் வைத்து நடந்து வருகிறார். அறைக்குள் இருந்த எல்லோரும் அவரைப் பார்க்கிறார்கள். அவர்களுடைய பார்வையில் ஒரு மதிப்புணர்ச்சி தெரிகிறது.அதை முன்பின் அறிந்திராத போதும், அவர்களுக்குள் ஒரு சிநேகம் தோன்றுகின்றது.அவரிடம் தங்களை அறிமுகம் செய்து கொண்டு பேச முனைகிறார்கள்.

ஒருவரை கண்டுகொள்ளாத இவர்களுக்கு, மற்றவரிடம் ஏன் அக்கறை உண்டாகிறது? இருவருமே சமூகத்தில் ஒரே படிநிலை இருந்தாலும், முந்தைய ஒருவரிடம் இல்லாத சில சிறப்பம்சங்கள் மற்றொரு மனிதரிடம் இருப்பதால் தான். கம்பீரமான தோற்றம், கச்சிதமான உடை, நேர்கொண்ட பார்வை, நேசிக்கிற புன்னகை இவை மற்றவரிடம் இருந்தன. அதனால் தான் எல்லோருடைய கவனத்தையும் அவர் கவர்ந்து கொண்டதில் வியப்பில்லை.நிமிர்ந்த தோற்றம், நேர்கொண்ட பார்வை, புன்னகை இவை வெற்றிக்கு முன்னறிவிப்பு செய்யும் அடையாளங்கள். விரும்பத்தக்க ஒரு மனிதரிடம் இவை நிச்சயம் இருக்கும். இம் மூன்றும் தன்னம்பிக்கையின் வெளிப்பாடுகள்.தலைமைப் பதவியில் இருப்பவர்கள் தங்கள் தன்னம்பிக்கையை தங்களுடைய முகபாவத்திலும், நடக்கிற முறையிலும், தாங்கள் அணிகின்ற உடையிலும் வெளிப்படுத்திக் கொண்டிருப்பார்கள்.ஒரு பேராசிரியர் உடுத்துகிற உடை மாணவர்கள் மத்தியில் அவரைப் பற்றி நற்கருத்தை உருவாக்கும். இது எல்லாத் துறைகளுக்கும் பொருந்தும்.

உங்களுடைய நம்பிக்கை, உறுதி, நேர்மை, அறிவுத்திறன், ஆக்கத் திறன், கூடிப் பழகும் இயல்பு, இவற்றையெல்லாம் உங்கள் முகத்தைப் பார்த்தே மற்றவர்கள் அறிகிறார்கள். உங்களைப் பற்றிய ஒரு முடிவுக்கு வருகிறார்கள். எனவே புன்னகையுடன் கூடிய மகிழ்ச்சிகரமான தோற்றம் சிறந்தது. ஒரு புன்னகை உங்களை சுறுசுறுப்புடையவராகிவிடும், நீங்கள் செயலுக்கான ஊக்கம் பெறுவீர்கள். உங்கள் உதடுகளால் நீங்கள் செய்யக்கூடிய சிறந்த காரியம் புன்னகை. இவையெல்லாம் உங்கள் ஆளுமை ஆற்றலை மேம்படுத்தும் சிறப்பம்சங்கள். இவற்றை மேம்படுத்தினால் ஆளுமை மிக்கவராக திகழலாம். இதற்கு உதாரணமாய் இந்த சாதனைப் பெண்மணியைச் சொல்லலாம்.சமூக ஊடகங்களின் மாபெரும் அமைப்பான மீடா (meta) இந்தியாவுக்கான துணைத் தலைவராக சந்தியா தேவனாதன் என்ற பெண்மணி நியமிக்கப்பட்டு சிறப்பாகப் பணியாற்றி வருகிறார். புகழ்பெற்ற சமூகச் செயல்பாட்டு களங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் ஆகியன உரிமையான நிறுவனம்தான் மீடா.

சந்தியா தேவனாதனின் தலைமையை மகிழ்ச்சியுடன் வரவேற்ற மீடாவின் வணிக அலுவலர் மார்னே லெவின் இந்தியாவில் மீடாவின் தொடர் வளர்ச்சிக்கு, சந்தியா தேவனாதன் உறுதுணையாக இருப்பார். வர்த்தகத்தை மேம்படுத்துவதில் அவர் தம்மைச் சிறந்தவர் என பலமுறை நிரூபித்திருக்கிறார். தன் னிகரற்ற குழுக்களை அமைத்து செயல் படுவதில் அவர் கை தேர்ந்தவர், புதுமைகளை புகழ்த்துவதில் ஆர்வம்கொண்டவர். வலுவான வணிகத் தொடர்புகளை ஏற்படுத்தும் ஆற்றல் மிக்கவர் என்று பாராட்டியுள்ளார்.சந்தியா தேவனாதன் 1994 முதல் 1998 முடிய உள்ள காலகட்டத்தில் ஆந்திர பல்கலைக்கழகத்தில் கெமிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பி.டெக் பட்டம் பெற்றவர். அதைத்தொடர்ந்து டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பட்டமும் பெற்றார்.

2014 ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் லீடர்ஷிப் பாடமும் பயின்று இருக்கிறார்.இவர் மீடா நிறுவனத்தில் 2016 ஆம் ஆண்டு சேர்ந்தார். சிங்கப்பூர் மற்றும் வியட்நாமில் மீடாவின் வணிகத் தொடர்புகளை வளர்த்தார். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இ-காமர்ஸ் எனும் மின் வணிக செயல்பாடுகளைத் துரிதமாக்கினார். இவருக்கு 22 வருட பணி அனுபவம் இருக்கிறது. சர்வதேச வங்கிப் பரிவர்த்தனைகள் மற்றும் தொழில்நுட்பங்களில் மிகுந்த தேர்ச்சி பெற்றவராகவும் இருக்கிறார்.இதற்கு முன்னர் சிடி குரூப் நிறுவனத்தில் பல்வேறு பதவிகளை மே 2003 டிசம்பர் 2009 வரை பணியாற்றி இருக்கிறார். ஸ்டேண்டர்ட் சார்ட்டட் நிறுவனத்தில் பணிபுரிந்து இருக்கின்றார். தாம் சார்ந்திருந்த நிறுவனங்கள் அனைத்திலும் பெண்களை தலைமை ஏற்க வைத்து தொடர்ந்து இவர் ஊக்குவித்தார்.

இந்தியாவில் மீடாவின் செயல்பாடுகளை முன்னெடுப்பவர் என்றும் வணிக உறவுகளை வலுப்படுத்துவார் என்றும், வாடிக்கையாளர்கள், படைப்பாளிகள், விளம்பரதாரர்கள் மற்றும் பங்குதாரர்களும் மீடா நம்பிக்கை தெரிவிக்கிறது.சந்தியா தேவனாதனின் ஆண்டு வருமானம் 32 கோடி ரூபாய்க்கு மேல இருக்கலாம் என சொல்கின்றனர். தற்போது சிங்கப்பூரில் பணிபுரிந்து வரும் 46 வயதான சந்தியா தேவனாதன் நீட்டா நிறுவனத்தில் இந்தியாவின் துணைத் தலைவர் என்ற புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்டு சிறப்பாக பணியாற்றி சாதித்து வருகிறார். சந்தியா தேவனாதன் மிக உயரிய பதவியை அடைந்ததற்கான மிக முக்கிய காரணம் அவருடைய ஆளுமை பண்புதான் என்பதில் ஐயமில்லை. எனவே அத்தகைய பண்புகளை மேம்படுத்திக் கொண்டு ஆளுமை மிக்கவராக திகழுங்கள்.

The post ஆளுமை மிக்கவராக திகழுங்கள் appeared first on Dinakaran.

Read Entire Article