டெல்லி: மசோதா ஒப்புதல் தொடர்பாக ஜனாதிபதி எழுப்பிய 14 கேள்விகள் குறித்து விளக்கம் தர 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நாளை அறிவிக்கப்பட உள்ளது. மாநில அரசுகளின் மசோதாக்களுக்கு ஒப்புதல் தர உச்சநீதிமன்றம் ஜனாதிபதி, ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயித்தது. தமிழக ஆளுநருக்கு எதிரான வழக்கில் மசோதாக்கள் மீது ஆளுநர் ஒரு மாதத்திலும், ஆளுநர் அனுப்பும் மசோதாக்கள் மீது ஜனாதிபதி 3 மாதத்திலும் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. இதுதொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகள் எழுப்பி கூடுதல் விளக்கம் கேட்டுள்ளார்.
உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கேட்ட குடியரசுத் தலைவர்;
* அரசியல் சாசனம் கால வரம்பு நிர்ணயிக்காத நிலையில் உச்சநீதிமன்றம் எப்படி கால வரம்பை நிர்ணயிக்க முடியும்?
* குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கான அதிகாரத்திற்கு மாற்றாக உச்சநீதிமன்றம் தனது தனிப்பட்ட அதிகாரமான 142-ஐ பயன்படுத்த முடியுமா?
* மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தின் தனிப்பட்ட அதிகாரத்தை ஒன்றிய அரசுக்கு எதிராக பயன்படுத்துகின்றனவா?
* மசோதாக்கள் மீது முடிவெடுக்கும் ஆளுநரின் அதிகாரமான அரசியல் சாசன பிரிவு 200-ஐ நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியாத வகையில் பிரிவு 361 பாதுகாப்பு வழங்கியுள்ளது
* அரசியல் சாசன பிரிவு 200-ன் கீழ் ஆளுநரின் விருப்புரிமை நியாயமானதா? அரசியல் சாசன பிரிவு 201-ன் கீழ் குடியரசுத் தலைவர் விருப்புரிமையைப் பயன்படுத்துவது நியாயமானதா?; உச்சநீதிமன்றம் தனிப்பட்ட அதிகாரமான அரசியல் சாசன பிரிவு 142-ஐ பயன்படுத்தி குடியரசு தலைவர், ஆளுநரின் உத்தரவுகளை எந்த வகையிலும் மாற்ற முடியுமா?
* உச்சநீதிமன்றம் தனிப்பட்ட அதிகாரமான அரசியல் சாசன பிரிவு 142 நடைமுறை சட்டவிதிகளுக்கு மட்டும் பயன்படுத்த முடியுமா? அல்லது நடைமுறை விதிகளுக்கு முரண்பாடான உத்தரவுகளை பிறப்பிக்கவும் அதிகாரம் உள்ளதா?
* ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் மாநில சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியுமா? உள்பட பரபரப்பான 14 கேள்விகளை எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக அரசியல் சான பிரிவு 143 (1) மூலம் ஜனாதிபதி திரவுபதி முர்மு வழியாக ஒன்றியஅரசு உச்ச நீதிமன்றத்தை அணுகி உள்ளது. இந்த விளக்கத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
The post ஆளுநர் விவகாரம்: உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகள் எழுப்பி கூடுதல் விளக்கம் கேட்ட குடியரசுத் தலைவர்.!! appeared first on Dinakaran.