ஆளவந்தார் அறக்கட்டளை இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை சீல் வைக்க வந்த அதிகாரிகளிடம் மீனவர்கள் வாக்குவாதம்: ஆதாரத்தை காட்டுங்கள் என தகராறு

2 months ago 11

மாமல்லபுரம், டிச. 10: மாமல்லபுரம் அருகே, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆளவந்தார் அறக்கட்டளை இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை சீல் வைக்க வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்தி தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மீனவர்களால் அதிகாரிகள் திரும்பி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாமல்லபுரம் அடுத்த, இசிஆர் சாலையில் உள்ள சாலவான்குப்பம், இளந்தோப்பு, பட்டிபுலம், சூளேரிக்காடு, நெம்மேலி, புதியகல்பாக்கம், திருவிடந்தை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சவுக்கு கன்று பயிரிட்டு பசுமையாக பராமரித்ததால் ஆங்கிலேயர்கள் நெம்மேலியைச் சேர்ந்த ஆளவந்தார் நாயக்கருக்கு 1,054 ஏக்கர் நிலத்தினை இலவசமாக வழங்கினர்.

தற்போது, இந்த சொத்துகள் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்நிலையில், ஆளவந்தார் அறக்கட்டளையின் நிலத்தை ஆக்கிரமித்து பண்ணை வீடுகள், மீனவர் பகுதிகளில் குடியிருப்புகள், கோயில்கள், ரிசார்ட்டுகள் மற்றும் இறால் பண்ணைகள் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள ஆளவந்தார் அறக்கட்டளை நிலங்களை மீட்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலர் பொதுநல வழக்கு தொடர்ந்து இருந்தனர். இதனையடுத்து, ஆக்கிரமிப்புக்குள்ளான ஆளவந்தார் அறக்கட்டளை நிலங்களை மீட்டு, உடனடியாக மீட்கப்பட்ட நிலங்களின் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

மாமல்லபுரம் அடுத்த, சூளேரிக்காடு மீனவர் குப்பத்தில் ஆளவந்தார் அறக்கட்டளை நிலத்தில் கட்டப்பட்டுள்ள 39 வீடுகளில், 37 வீடுகளில் வசிப்பவர்கள் நீதிமன்றம் சென்று, வாடகையை நிர்ணயித்தால் நாங்கள் அந்த வாடகைத் தொகையை கட்டுகிறோம் என தெரிவித்தனர். மீதமுள்ள, 2 வீடுகளில் வசிப்பவர்கள் நீதிமன்றம் செல்லவில்லை. இந்நிலையில், அந்த 2 வீடுகளை சீல் வைக்க செங்கல்பட்டு மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராஜலட்சுமி, இந்து சமய அறநியைத்துறை தாசில்தார்கள் தங்கராஜ், ராதாகிருஷ்ணன், திருப்போரூர் தாசில்தார் வெங்கட்ரமணன், ஆளவந்தார் அறக்கட்டளை செயல் அலுவலர் செல்வகுமார், நித்யகல்யாண பெருமாள் கோயில் செயல் அலுவலர் சரவணன் ஆகியோர் போலீஸ் பாதுகாப்போடு நேற்று சீல் வைக்க சென்றனர்.

அப்போது, நெம்மேலி ஊராட்சி தலைவர் ரமணி சீமான், மீனவ பஞ்சாயத்தார் முன்னிலையில், மீதமுள்ள 2 வீடுகளை சேர்ந்தவர்களும் நீதிமன்றம் சென்று வாடகை செலுத்துவதாக தெரிவிக்கிறோம் என்று எழுதி கொடுத்து, 10 நாட்கள் அவகாசம் கேட்டனர். இதனையேற்று, சீல் வைக்காமல் அதிகாரிகள் திரும்பி வந்தனர். இதனைத் தொடர்ந்து, பட்டிப்புலம் குப்பத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 41 வீடுகளை சீல் வைக்க அதிகாரிகள் வந்தனர். அப்போது, மீனவ மக்கள் நாங்கள் காலம்காலமாக வசித்து வருகிறோம். ஆளவந்தாருக்கு யார் மூலம் இந்த சொத்துகள் வந்தது என ஆதாரத்தை காட்டுங்கள். பணவசதி படைத்த பலர் பல ஏக்கர் நிலங்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டி உள்ளனர். அவர்களை, அங்கிருந்து வெளியேற்றும் வழியை பாருங்கள்.

அதிகாரிகள் அனைவரும் நீதிமன்றம் செல்லுங்கள். நாங்கள் நீதிமன்றம் செல்லவும் மாட்டோம், வீடுகளை சீல் வைக்கவும் விட மாட்டோம் என அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆளவந்தார் அறக்கட்டளையினர் எங்களிடம் அனைத்து ஆவணங்களும் உள்ளன, தேவையில்லாமல் பிரச்னை செய்ய வேண்டாம் என கூறினர். இருப்பினும், மீனவ மக்கள் தொடர் வாக்குவாதத்தில் ஈடுபடவே, அதிகாரிகள் சீல் வைக்காமல் திரும்பி வந்து விட்டனர். இதனால், 1 மணி நேரம் பரபரப்பு நிலவியது. இதில், செங்கல்பட்டு மாவட்ட செயல் அலுவலர்கள் மற்றும் செங்கல்பட்டு ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். முன்னதாக, அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில், எஸ்ஐக்கள் திருநாவுக்கரசு, விஜயகுமார் முன்னிலையில், தீயணைப்பு அலுவலர் இன்பராஜ் மற்றும் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

The post ஆளவந்தார் அறக்கட்டளை இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை சீல் வைக்க வந்த அதிகாரிகளிடம் மீனவர்கள் வாக்குவாதம்: ஆதாரத்தை காட்டுங்கள் என தகராறு appeared first on Dinakaran.

Read Entire Article