ஆலய வழிபாடு அவசியமா?

2 hours ago 3

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் ஆன்மிக உலகில் பெரும் சிறப்புக்கு உரியவர். அவரின் நகைச்சுவை சொல்லாடலுக்கு மயங்காத ஆளே அந்தக் காலத்தில் இல்லை. தமிழகம் மட்டு மல்லாமல், தமிழர் வாழும் உலக நாடுகள் சென்று இறையருள் சிந்தனையை விதைத்தவர். அதோடு தமிழையும் இசையோடு பரப்பியவர். அவரிடம் ஒருமுறை ஒரு கேள்வி கேட்கட்பட்டது.

இறைவனை வீட்டில் வழிபட்டால் போதாதா? ஆலய வழிபாடு அவசியமா? அங்கு சென்றால்தான் அருள் கிடைக்குமா? அதற்கு வாரியார் சுவாமிகள் ஒரு உதாரணம் சொன்னார்; பசுவின் உடல் முழுவதும் பால் நிரம்பி இருந்தாலும், அதை காது வழியாக கறக்க முடியுமா? இல்லை வாலை இழுத்தால் கறக்க முடியுமா? முடியாது. பாலை மடியின் வழியாகத்தான் கறக்க முடியும். அதுபோல இறையாற்றலானது எங்கும் வியாபித்திருந்தாலும், அதை திருக்கோயிலில்தான் அதிக அளவில் பெற முடியும். மூவரும் தேவரும் என எத்தனையோ அருளாளர்கள் தரிசித்த தலத்தை நாமும் தரிசிப்பதால், இறை அருளோடு இறை அடியார்களின் அருளும் கிடைக்கும் அல்லவா! ஆலயம் என்னும் சொல் ‘‘ஆன்மா லயப்படுகின்ற இடம்’’, ‘‘ஆன்மாக்கள் இறைவனை ஒரு மனதுடன் வணங்குவதற்கான இடம்’’ என்ற பொருள் கொண்டது. பண்டைத் தமிழ் இலக்கியங்களில் கோட்டம் என்னும் சொல்லும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

“ஆ” என்பது ஆணவ மலத்தையும், லயம் என்பது அடங்கி இருத்தலையும் குறிக்கும். அதனால், ஆலயம் ஆணவ மலம் அடங்குவதற்குரிய இடம் எனவும் கூறுவர், இதனை கோயில் எனவும் கூறுவர் கோ – கடவுள், இல் – தங்குமிடம். கோயில் – கடவுள் தங்குமிடம் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது. ஆகவேதான் ஆலய வழிபாடு என்பது இறைவழிபாடு என்று பொருள்படும். அது பற்றியே மெய்கண்ட தேவநாயனாரும் ஆலயந்தானும் அரனெனத் தொழுமே என்றருளினார். கோயில்கள் நமது உடம்பின் வடிவில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதனை க்ஷேத்ரம் (தலம்) சரீரப்பிரஸ்தாரம் என்பர். ஆலயம் மனிதர் உடம்புபோல் அமைக்கப்பட்டிருக்கிறது என்பது இதன் பொருள். இறைவன் எங்கும் நிறைந்திருந்தாலும், மந்திரம், பாவனை கிரியைகளால் அவனருள் ஆலயத்தில் விளங்கித் தோன்றும்.

பொதுவாக எல்லா சிவாலங்களிலும் கர்ப்பக்கிருகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், நீராட்டு மண்டபம், தம்ப மண்டபம், நிருத்த மண்டபம் முதலியனவும்; ஐந்து அல்லது மூன்று பிராகாரங்களும், கோபுரமும், யாகசாலை, நந்தி, பலிபீடம், கொடிமரம் முதலியவையும் முக்கியமாக இருக்கும்.

இவ்வமைப்பு உடலமைப்பை ஒட்டியது என்பர் ஆன்றோர். தேகமாகிய ஆலயத்துள்ளும் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என ஆறு ஆதாரங்களும் அறியப்படும். இவ்வுடலில் அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் என்று ஐந்து கோசங்கள் உள்ளன. (கோசம் – சட்டை). கோயிலிலுள்ள ஐந்து பிராகாரங்களும் இவற்றைக் குறிக்கின்றன. அந்த ஆலயங்களை முறையோடு வணங்கத்தான் பல்வேறு விதிகள். அந்த விதிகளில் சிலவற்றை சென்ற கட்டுரையில் பார்த்தோம். இப்போது இன்னும் சில விதிகளைத் தெரிந்து கொள்வோம்.

கோயில் அருகில் சென்றதும், கோபுரத்தின் அருகே நின்று, ஆண்கள் அனைவரும் இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்திக் கும்பிட வேண்டும். பெண்கள் தங்கள் இரண்டு கைகளையும் நெஞ்சோடு வைத்துக் கும்பிட்டாலே போதும். ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு விதி உண்டு. கேரள கோயில்களில் ஆடை விதிகள் கட்டாயம். ஆண்கள் மேலே சட்டை அணியக் கூடாது. பெண்களுக்கும் ஆடை கட்டுப்பாடு உண்டு. திருமலையிலும் இன்னும் சில தென்கோடி தமிழக ஆலயங்களிலும் ஆடை விதிகள் உண்டு. கைலி, தலையில் தொப்பி, முண்டாசு அணிந்துகொண்டு செல்லக் கூடாது.

பசுமடம் உள்ள கோயிலுக்குச் செல்லும்போது, வாழைப்பழம் அல்லது அகத்திக்கீரை கொண்டு செல்வது சிறப்பு. சிவன் கோயில் என்றால் மூன்று, ஐந்து, ஏழு என எண்ணிக்கையில் வலம் வருவது சிறப்பு. முதலில் நந்தி பகவானை வழிபட்ட பின்னரே, சிவபெருமானை வழிபட வேண்டும். விநாயகரை இரு கைகளால், தலையில் குட்டிக் கொண்டு தோப்புக்கரணம் போட்டு வணங்கி வழிபட வேண்டும். கோயிலின் உள்ளே உள்ள மற்ற சந்நதிகளைக் காட்டிலும், கொடி மரத்தின் அருகில் மட்டுமே விழுந்து கும்பிட வேண்டும்.

வடக்கே காசி போன்ற தலங்களில் நாமே பூஜை செய்யலாம். இங்கே அப்படி இல்லை. விக்கிரகங்களைத் தொட்டு வணங்கக் கூடாது. சந்நதியின் முன்போ, மற்ற நபர்களிடமோ கைகளைத் தட்டிக் வணங்கக்கூடாது. ஒவ்வொரு சந்நதிக்கும் ஏற்றத் துதி பாடல்கள் பாடி வழிபடுவது சிறப்பு. ஆனால் அது பூஜைக்கோ, மற்றவர்கள் வழிபாட்டுக்கோ தொந்தரவு தருவதாக இருக்கக் கூடாது. அதைவிட மனதில் சொல்லிக்கொள்வதும், ஏதாவது ஒரு இடத்தில் உட்கார்ந்து ஜபம் செய்வது நல்லது. அங்கே ஆன்மிகச் சொற்பொழிவுகள் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதும் கேட்பதும் நல்லது.

நந்தியின் கழுத்தில் எந்த ரகசியமும் சொல்ல வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. பிரகாரம் வலம் வரும் பொழுது வேகமாக நடக்கக் கூடாது. சண்டிகேஸ்வரர் சைவ சமயத்தின் பஞ்ச மூர்த்திகளில் ஒருவராகவும், சிவபெருமானுக்கு படைக்கப்படும் உணவு மற்றும் உடைகளின் அதிபதியாகவும் இருக்கிறார். இவருடைய சந்நதி சிவாலயங்களில் சிவ பெருமானின் கருவறை அமைந்திருக்கும் பகுதியின் இடப்பாகத்தில் இருக்கும். அங்கே சிலர் விரல் சொடுக்குவார்கள். கை தட்டுவார்கள். இது தவறு. இவ்வாறு செய்தால், இவரது தியானம் கலைந்து விடும். அதனால் அவர் முன்பு கை தட்டி வணங்காமல் அமைதியாக வணங்குவதே சரியானது. சண்டிகேஸ்வரரை வணங்கினால் மன உறுதியும், ஆன்மிக பலமும், சிவாலய தரிசன பலனும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பலிபீடம், நந்தி, கோபுரம் நிழலை மிதிக்கக் கூடாது. நந்தி தேவருக்கும் சிவலிங்கத்திற்கும் இடையில் போகக் கூடாது. கோயிலில் விபூதியோ குங்குமமோ கொடுத்தால், அவற்றை வலது கையால் மட்டுமே வாங்க வேண்டும். நடந்து கொண்டே நெற்றியில் விபூதி இடக்கூடாது. கோயிலுக்குள் உயர்ந்த ஆசனத்தில் அமரக் கூடாது. பலிபீடத்திற்கு உள்ளே சந்நதியில் யாரையும் வணங்கக் கூடாது. கோயில் உள்ளே நம் குடும்பக் கதைகளை, அல்லது பிறர் பற்றிய அவதூறுகளை பேசுதல் கூடாது. நம்முடைய பேச்சுக்களோ செயல்களோ அடுத்தவர்களுடைய வழிபாட்டையோ, தியானத்தையோ கெடுக்கக் கூடாது. வெற்றிலை பாக்கு போடுதல், பொடிபோடுதல் நிச்சயம் கூடாது.

இப்போது ஒரு புது பழக்கம் வந்திருக்கிறது. பூஜை நேரத்தில் கைப்பேசிகளில் படம் எடுத்துக்கொண்டே இருப்பது. இதில் நம் கவனமும் போகும். பிறர் வழிபாடும் கெடும். அதைப் போலவே சத்தமாக கை பேசியில் பேசுவதும் கூடாது. அதனால் சில கோயில்களில் கை பேசிகளையும் புகைப்படக் கருவிகளையும் அனுமதிப்பது இல்லை. கோயிலுக்குள் உறங்கக் கூடாது. கோயிலில் இருந்து வீட்டிற்குக் கிளம்புவதற்கு முன்பாக, கோயிலில் ஏதாவது ஒரு இடத்தில் சிறிது நேரம் அமர்ந்துவிட்டு பிறகுதான் செல்ல வேண்டும். கோயிலில் நுழையும் போதும், திரும்பி வரும் போதும் கோபுர தரிசனம் அவசியம். ஸ்தல விருட்சங்களை இரவில் வழிபடக் கூடாது. கோயில் தீர்த்தங்களில் இரவில் நீராடக்கூடாது. துணிமணி, எண்ணெய் சீயக்காய் சோப்பு என தீர்த்தத்தில் போட்டு அசுத்தம் செய்யக்கூடாது.

கோயிலுக்குச் சென்று வந்ததும், குறைந்த பட்சம் ஒருவருக்காவது தானம் செய்ய வேண்டும். கோயிலுக்குச் சென்று வந்தபின் வீட்டில் உடனடியாகக் கால்களைக் கழுவக் கூடாது. சிறிது நேரம் அமர்ந்த பிறகுதான் கழுவ வேண்டும். கோயிலில் இருந்து நேராக நாம், வீட்டிற்குத்தான் செல்ல வேண்டும். இவை சிவாலய விதிகள். விஷ்ணு ஆலயங்களுக்கும் விதிகள் இருக்கின்றன.

The post ஆலய வழிபாடு அவசியமா? appeared first on Dinakaran.

Read Entire Article