ஆற்றை ஆக்கிரமித்த கருவேல மரங்களை அகற்றி தடுப்பணை அமைக்க வேண்டும்

1 week ago 3

*விவசாயிகள் வலியுறுத்தல்

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே கோட்டைகரை ஆற்றில் கருவேல முட்புதர்களை அகற்றி விட்டு, மழை காலங்களில் கடலுக்கு வீணாக செல்லும் உபரி நீரை சேமித்து விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சிய பகுதியாக விளங்கும் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் உள்ள கோட்டைகரை ஆறு 30 கி.மீ தூரத்திற்கும் அதிகமான நீளம் கொண்டது. இந்த பகுதியில் ஆண்டுதோறும் மழை காலங்களில் பெய்யும் மழை நீர், மழையால் கண்மாய் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து வெளியேறும் உபரி நீர் கோட்டைகரை ஆற்றின் வழியாக வீணாக கடலுக்கு சென்றடைகின்றன.

இந்த ஆற்றின் பெரும்பாலான உட்பகுதி முழுவதும் காட்டு கருவேல முட்புதற்கள் நிறைந்து காடு போல் காட்சியளிக்கிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழையால் ஏராளமான தண்ணீர் வீணாக கடலுக்கு தான் சென்றடைந்தது. காரணம் ஆற்றை தூர்வாரி கரைகளை பலப்படுத்தாமலும், தடுப்பு அணைகள் ஏதும் கட்டாமல் விட்டு விட்ட காரணத்தாலும் தான் தண்ணீர் வீணாக கடலுக்கு சென்றது.

ஆண்டுதோறும் மழை காலங்களில் மழைநீர் வீணாகி வருவது வழக்கமாக உள்ளது. ஆகையால் இதனை தடுத்து நிறுத்தி விவசாயிகளுக்கு பயன் பெறும் வகையில் சனவேலி கோட்டை கரை ஆற்றின் குறுக்கே ஒரு அணையை கட்டினால், இனி வரும் மழை காலங்களிளாவது கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீரை சேமிக்கலாம்.

அவ்வாறு சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டு விவசாயிகள் தங்களின் விளை நிலங்களுக்கு விட்டு விவசாயம் செய்ய ஏதுவாக இருக்கும். விவசாயம் நன்கு செழிப்படையும்.
இதனால் இப்பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் செழிக்கும் என்பதில் ஐயமில்லை. அது மட்டுமின்றி நிலத்தடி நீர்மட்டமும் உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த அதிமுக ஆட்சியில் இது சம்மந்தமாக எந்தவித முயற்சியும் எடுக்காமல் விட்டு விட்டதால் இன்றளவும் இப்பகுதியில் உள்ள பெரும்பாலான விளை நிலங்கள் வானம் பார்த்த பூமியாகவே உள்ளது. கடந்த காலங்களில் மழை தண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டு வாழும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தற்போதைய ஆளும் திமுக அரசு, கோட்டைகரை ஆற்றில் உள்ள முட்புதர்களை அகற்றுவதுடன் ஆற்றை தூர் வாரி நீரை தேக்குவதற்கான சரியான இடங்களை தேர்வு செய்ய வேண்டும்.

மேலும் விவசாயிகளுக்கு பதிப்பின்றி ஆற்றின் குறுக்கே அணை கட்டி மழை காலங்களில் கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.கடந்த ஆண்டிற்கு முந்தைய ஆண்டு தவிர அதற்கு முந்தைய சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால், போதிய நீர் தேக்கம் இல்லாததாலும் பொதுமக்கள் குடிக்க கூட தண்ணீர் கிடைக்காமல் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வந்தனர்.

மேலும் ஒரு குடம் தண்ணீர் ரூ.5 முதல் 10 வரை வாங்கி பயன்படுத்தி வந்தனர். ஆகையால் இப்பகுதியில் மேலும் இதுபோன்ற நிலை ஏற்படாமல் இருப்பதற்கும், நிலத்தடி நீர்மட்டம் உயருவதற்கும் ஏதுவாக இதுபோன்ற நீர் நிலைகளை பாதுகாத்து பயன்படுத்த வேண்டும்.

எனவே தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுத்து மழை காலங்களில் உபரி நீர் வீணாக கடலுக்கே சென்றடைவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
இதற்காக அரசு உரிய நிதியை ஒதுக்கீடு செய்து கருவேல முட்புதர்களை அகற்றி விட்டு தூர்வாரி, விவசாயிகள் பயன்பெறும் வகையில் தண்ணீரை சேமிப்பதற்கு ஏதுவாக தடுப்பணையை கட்டி தரவேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஆற்றை ஆக்கிரமித்த கருவேல மரங்களை அகற்றி தடுப்பணை அமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Read Entire Article