*எஸ்பி அலுவலகத்தில் அதிமுக நிர்வாகி புகார் மனு
ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை எஸ்பி அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைத்தீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு டிஎஸ்பிக்கள் ரமேஷ்ராஜ், வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து 32 மனுக்கள் பெறப்பட்டது. கூட்டத்தில் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த ரங்கநாதன் அளித்த மனுவில்: எனது தங்கை மகன் காவனூர் கிராமத்தில் வசித்து வருகிறார்.
கடந்த 2020ம் ஆண்டு என் தங்கை மகன் ஏலச்சீட்டு நடத்தி வருவதாக அதில் சேர சொல்லி கூறினார். நானும் ஏலச்சீட்டில் சேர்ந்து மூன்று சீட்டு என மாதந்தோறும் ரூ.15 ஆயிரம் வீதம் 19 மாதம் கட்டி வந்தேன். சீட்டு கட்டி முடித்த பிறகு எனது பணத்தை கேட்டால் தருகிறேன் எனக்கூறி காலம் தாழ்த்தி வந்தார். பின்னர் எனது பணத்தை அவர் எடுத்துக் கொண்டார் என தெரிய வந்தது. இது சம்பந்தமாக போன் செய்தால் எனது அழைப்பை எடுப்பதில்லை.
எனவே எனது சீட்டு பணத்தை மீட்டு எனக்கு தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. ஆற்காடு வட்டம் தாஜ்புரா கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர் அளித்த மனுவில்: நான் அதிமுகவில் மாநில பொதுக்குழு உறுப்பினராகவும், வியாபார சங்க கவுரவ தலைவராகவும் பொது மக்களுக்கு சேவை செய்து வருகிறேன். கடந்த 2019ம் ஆண்டு எனது இல்லத்திற்கு தாஜ்புரா முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் இரண்டு நபர்கள் ஆகியோர் வந்திருந்தனர்.
இவர்கள் என்னிடம் நாங்கள் புதியதாக பைனான்ஸ் தொடங்க உள்ளோம். ஒரு நபருக்கு ₹50ஆயிரம் பங்கு தொகையாக செலுத்தி நீங்களும் பங்குதாரராக சேர்ந்து பைனான்ஸ் தொடங்கலாம் என கூறினர். பிறகு நானும் ₹50ஆயிரம் கொடுத்தேன். பின்னர் ரூ.1லட்சம் மற்றும் ரூ.50ஆயிரம் சீட்டு கட்ட சொன்னார்கள். நானும் சீட்டு பணம் கட்டி வந்தேன். கடைசி சீட்டுக்கு ஏலம் எடுக்க சென்றேன்.
பின்னர் சீட்டு பணத்தை கேட்டால் பைனான்சில் பணம் வெளியில் உள்ளது. இன்னும் வசூல் ஆகவில்லை. வசூல் ஆன பிறகு பணம் தருகிறேன் கூறி வந்தனர். பணத்தைக் கேட்கும் போதெல்லாம் வசூல் ஆனதும் தருகிறேன் என கூறிய வந்த நிலையில் கடந்த 2ம் தேதி அன்று மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்லும்போது எனது வீட்டின் அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இருந்தார். சீட்டு பணத்தை கொடுங்கள் என கேட்டதற்கு தரமுடியாது எனவும், தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுக்கின்றார். எனவே எனது சீட்டுப் பணம் மற்றும் பைனான்ஸ் பங்குத் தொகை ஆகியவற்றை மீட்டுத் தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
ஆற்காடு மாசாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பெண் அளித்த மனுவில்: எனது மகளுக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வாலாஜாவை சேர்ந்தவருக்கு சீர்வரிசை கொடுத்து திருமணம் செய்து வைத்தேன். எனது மகளுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது மேலும் பணம் மற்றும் நகையை வாங்கி வரச்சொல்லி எனது மகளை அடித்து துன்புறுத்தி எனது வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டனர். எனது மகளை அவரது மாமியார் துன்புறுத்தி வருகின்றார்.
இது சம்பந்தமாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்திருந்தேன். இதுவரை எனது மகளின் கணவரையும், அவரது மாமியாரையும் அழைத்து விசாரணை செய்யவில்லை. அவர்களை அழைத்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. கூட்டத்தில் இது தவிர பணம் மோசடி, நில அபகரிப்பு, குடும்ப பிரச்சனை, சொத்து தகராறு உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் வர பெற்றது.
The post ஆற்காடு அருகே பைனான்ஸ் பங்கு தொகை, ஏலச்சீட்டு நடத்தி மாஜி ஊராட்சி தலைவர் ₹2 லட்சம் மோசடி appeared first on Dinakaran.