ஆர்.கே.பேட்டையில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு களநீர் பரிசோதனை பயிற்சி

4 months ago 10

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டையில் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு களநீர் பரிசோதனை பயிற்சி அளிக்கப்பட்டது.  ஆர்.கே.பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், தமிழக குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், ஜல் ஜீவன் மிஷன் (2024-25) திட்டத்தில் ஆர்.கே.பேட்டை ஊராட்சிகளை சேர்ந்த மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு களநீர் பரிசோதனை பயிற்சி முகாம் நேற்று நடந்தது. குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் பரத் தலைமை வகித்தார்.

வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி முன்னிலை வகித்தார். இதில், பங்கேற்ற 190 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு, ஊராட்சிகளில் வினியோகம் செய்யப்படும் குடிநீர் குடிப்பதற்கு உகந்ததா என்பதை சோதனை செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், 1000 லிட்டர் தண்ணீரில் 4 கிராம் குளோரின் கலக்க வேண்டும் என்றும், அதை கலக்கும் முறைகள் குறித்தும் உதவி நீர் ஆய்வாளர் பிரீத்தி மற்றும் பூர்ணிமா ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

களநீர் பயிற்சி மேற்கொள்வதற்காக மகளிர் சுயஉதவி குழுக்களை சேர்ந்தவர்களை, ஊராட்சிக்கு தலா 5 பேர் வீதம் 38 ஊராட்சிகளில் 190 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து, நாளொன்றுக்கு 10 ஊராட்சிகள் வீதம் மொத்தம் 5 நாட்கள் இந்த பயிற்சி நடக்க உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

The post ஆர்.கே.பேட்டையில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு களநீர் பரிசோதனை பயிற்சி appeared first on Dinakaran.

Read Entire Article