ஆர்.கே.பேட்டை அருகே அடிக்கடி பழுதாகும் ஏடிஎம் இயந்திரம்: வாடிக்கையாளர்கள் அவதி

3 months ago 22

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அடுத்த சின்ன நாகபூண்டி கிராமத்தில் செயல்படும் யூனியன் வங்கி ஏடிஎம் இயந்திரம் அடிக்கடி பழுதாவதால், வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கவும், போடவும் முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆர்.கே.பேட்டை ஒன்றியம், சின்ன நாகபூண்டி கிராமத்தில் யூனியன் வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் பெரியநாகபூண்டி, மரிகுப்பம், விபிஆர்.புரம், தேவலாம்பாபுரம், நேசனூர், பெரியராமாபுரம், மயிலார்வாடா, கொடிவலசா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கணக்கு வைத்துள்ளனர்.

வாடிக்கையாளர்களின் வசதிக்காக யூனியன் வங்கி நிர்வாகம், வங்கி முன்பு ஏடிஎம் சேவை தொடங்கியது. கடந்த சில மாதங்களாக வாரத்தில் 3 நாட்கள் இந்த இயந்திரம் பழுதடைந்து விடுகிறது. இதன் காரணமாக, வாடிக்கையாளர்கள், பணம் எடுப்பதற்கும், பணம் டெபாசிட் செய்யவும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக, வங்கி விடுமுறை தினங்களில் அவதிப்படுகின்றனர்.

பென்ஷன் பெறும் முதியோர், வங்கி வளாகத்தில் ஏடிஎம் செயல்படாததால், 10 கிமீ தூரமுள்ள மற்றொரு ஏடிஎம் மையத்துக்குச் செல்லும் நிலை உள்ளது. இந்நிலையில் நேற்று ஏடிஎம் பழுதானதால் பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கவும், போடவும் முடியாமல் கடும் அவதிப்பட்டனர். எனவே, வங்கி வளாகத்தில் உள்ள ஏடிஎம் இயந்திரம் பழுதை உடனடியாக சரிசெய்து, ஏடிஎம் மையத்தினை திறப்பதற்கு, வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஆர்.கே.பேட்டை அருகே அடிக்கடி பழுதாகும் ஏடிஎம் இயந்திரம்: வாடிக்கையாளர்கள் அவதி appeared first on Dinakaran.

Read Entire Article