ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி கோரி அடுத்த ஆண்டு மனுக்கள் வராது என நம்புகிறோம்: உயர் நீதிமன்றம் கருத்து

3 months ago 17

சென்னை: ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி அடுத்த ஆண்டு மனுக்கள் வராது என நம்புவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 6ம் தேதி தமிழகம் முழுவதும் 58 இடங்களில் அணிவகுப்பு நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது ஆஜரான அரசு வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன், ஏற்கனவே 42 இடங்களில் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் மேலும் 10 இடங்களில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, 6 இடங்களிலும் அனுமதி அளிக்கப்படுமா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர், ஆவடி காவல் ஆணையர் எல்லைக்குட்பட்ட 4 இடங்களில் அனுமதி கேட்கப்பட்ட நிலையில் 2 இடங்களில் அனுமதி அளிக்கப்படவில்லை. ஒரே நாளில் 4 இடங்களிலும் பாதுகாப்பு அளிக்க இயலாது. தசரா விழா காரணமாக தூத்துக்குடி, சாயர்புரம் மற்றும் கோவை மாவட்ட ரத்தினபுரியில் அக்டோபர் 6ம் தேதி பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் உள்ளது. அதேபோல, மேடவாக்கம் மற்றும் சேலையூரிலும் அனுமதி அளிப்பதில் சிரமங்கள் உள்ளன என்றார்.

இதையடுத்து மீதமுள்ள 6 இடங்களுக்கும் அனுமதி வழங்க உத்தரவிட்ட நீதிபதி, மேற்கொண்டு எந்த நிபந்தனைகளையும் விதிக்கக்கூடாது. குறிப்பிட்ட மதத்தினரின் வழிபாட்டு தலங்கள் இருக்கும் பகுதி மற்றும் கொள்கை கொண்ட கட்சியினர் அலுவலகம் இருக்கும் பகுதி என்று கூறி ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி மறுக்கக் கூடாது. எதிர்காலங்களில், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி ஏற்கனவே வரையறுக்கப்பட்ட நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்க வேண்டும். அடுத்த ஆண்டு இதுபோன்ற மனுக்கள் நீதிமன்றத்திற்கு வராது என நம்புவதாக கூறி வழக்கை முடித்து வைத்தார்.

The post ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி கோரி அடுத்த ஆண்டு மனுக்கள் வராது என நம்புகிறோம்: உயர் நீதிமன்றம் கருத்து appeared first on Dinakaran.

Read Entire Article