ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த மேல்விஷாரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ரூ.2.24 கோடி மதிப்பில் தரம் உயர்த்தப்பட்டு கடந்த ஆண்டு டிசம்பர் 7ம் தேதி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். 24 மணி நேரம் செயல்படும் இந்த மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை 8 மணியளவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்த சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது, மருந்து மாத்திரைகள் வாங்குவதற்கு 5 பேரும், கர்ப்பிணி ஒருவரும் என 6 பேர் அங்கு காத்திருந்தனர். ஆனால், பணியில் இருக்க வேண்டிய 5 டாக்டர்கள் மற்றும் 4 நர்ஸ்கள் யாரும் இல்லை. இரவு காவலாளி உட்பட பணியாளர்களும் இல்லை. சுகாதார நிலையத்தின் அனைத்து அறைகளும் மூடப்பட்டிருந்தன.
தொடர்ந்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஒவ்வொரு அறையாக திறந்து பார்த்து ஆய்வு செய்தார். பின்னர், காலை 8.15 மணி வரையிலும் யாரும் வரவில்லை. சிறிது நேரத்தில் மக்களை தேடி மருத்துவ திட்ட செவிலியர் அங்கு வந்தார். அமைச்சர் அவரிடம், `ஏன் டாக்டர்கள் உட்பட யாரும் இல்லை என கேட்டார். பதிவேடுகளை கொண்டு வருமாறு கூறி பார்வையிட்டார்.
பின்னர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குனர் செல்வநாயகத்தை செல்போனில் தொடர்பு கொண்டு உத்தரவிட்டார். இந்நிலையில், முதற்கட்ட விசாரணைக்கு பின் இரவு பணியில் இருந்த டாக்டர், நர்ஸ், காவலர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும், வட்டார மருத்துவ அலுவலரிடம் விளக்க கேட்கப்பட்டுள்ளது.
The post ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு பணியில் இல்லாத டாக்டர், நர்ஸ், காவலர் சஸ்பெண்ட்: அமைச்சர் அதிரடி appeared first on Dinakaran.