ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய கனமழை: சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்

1 week ago 3

ஆரணி, நவ.8: ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. அதேபோல், திருவண்ணாமலை மாவட்டத்திலும் சில தினங்களாக பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்தும், பின்னர் மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு, கனமழையும் விட்டுவிட்டு லேசான சாரல் மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழக கடலோர பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டு இருப்பதால், டெல்டா மாவட்டங்கள் உள்பட 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும், வரும் 6 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் நேற்று காலை முதல் வானம் மேகமுட்டத்துடன் காணப்பட்டு, சில பகுதிகளில் கனமழையும், லேசான சாரல் மழையும் பெய்து வந்தது. பின்னர், மதியம் ஒரு மணியளவில் ஆரணி டவுன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான எஸ்.வி.நகரம், இரும்பேடு, தேவிகாபுரம், சேவூர், ராட்டிணமங்கலம்,கண்ணமங்கலம், தச்சூர், அடையபலம், மாமண்டூர், வடுக்கசாத்து, குண்ணத்தூர், களம்பூர் உட்பட உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை 2 மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கியது. இதனால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், விவசாய நிலங்கள், குளங்கள், நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கியது.
கடந்த சில தினங்களாக பகலில் வெயில் சுட்டெரித்தாலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் பெய்து வரும் மழையால் குளிர்ந்த காற்று வீசி வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய கனமழை: சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம் appeared first on Dinakaran.

Read Entire Article