ஆயுதபூஜை, விஜயதசமி தொடர் விடுமுறை அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்

1 month ago 6

*நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி

ஊட்டி : ஆயுதபூஜை, விஜயதசமி என 3 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா தலங்கள் நிறைந்த நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதுமட்டுமின்றி தொடர் பண்டிகை விடுமுறை சமயங்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகளவு காணப்படும். தற்போது ஊட்டியில் 2வது சீசன் நிலவி வருகிறது. இதனை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக தேனிலவு தம்பதியரின் வருகை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் வார விடுமுறை நாட்கள் என 3 நாட்கள் தொடர் விடுமுறை மற்றும் கர்நாடகாவில் தசரா விடுமுறை காரணமாக கடந்த வியாழக்கிழமை மாலை முதலே சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற்று ஊட்டி வர துவங்கினர். இதனால், ஊட்டியில் உள்ள பெரும்பாலான லாட்ஜ், காட்டேஜ்களில் அறைகள் நிரம்பின. தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா காட்சி முனை உள்ளிட்டவைகள் களைகட்டின. நேற்று ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட சற்று அதிகமாக காணப்பட்டது.

ஊட்டி நகரில் கமர்சியல் சாலை, எட்டின்ஸ் சாலை, பூங்கா சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பனிமூட்டத்துடன் கூடிய இதமான காலநிலை நிலவியதால், அதனை அனுபவித்த படியே தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தளங்களை சுற்றி பார்த்தனர்.

ஊட்டி ஏரியில் உள்ள படகு இல்லத்தில் இருந்து படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டினர். காலையில் சிறிது நேரம் மழை பெய்ததால் சுமார் அரை மணி நேரம் பாதுகாப்பு கருதி படகு சவாரி நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் மழை குறைந்து இதமான காலநிலை நிலவிய நிலையில் மீண்டும் படகு சவாரி துவங்கியது. இதனால் நீண்ட நேரம் காத்திருந்து படகு சவாரி மேற்கொண்டனர். இதேபோல் மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள முதுமலை, சூட்டிங்மட்டம், அவலாஞ்சி, தொட்டபெட்டா மலைசிகரம் உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது.

The post ஆயுதபூஜை, விஜயதசமி தொடர் விடுமுறை அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article