சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ம் தேதி பெரம்பூரில் அவரது வீட்டின் அருகே படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நாகேந்திரன், அவரின் மகன் அஸ்வத்தாமன் உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சம்பவ செந்தில் தொடர்ந்து தலைமறைவாக இருந்து தேடப்பட்டு வருகிறார். இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணையில் உள்ளது. வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கில் காவல்துறை தரப்பில் ஆஜராவதற்காக சிறப்பு குற்றவியல் வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் ஆர்.ஸ்ரீனிவாஸ், கூடுதல் சிறப்பு குற்றவியல் வழக்கறிஞராக சி.எஸ்.எஸ்.பிள்ளை ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அரசாணையை உள்துறை (நீதிமன்றங்கள்) கூடுதல் தலைமை செயலாளர் தீரஜ் குமார் பிறப்பித்துள்ளார். பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டப் பிரிவு 18(8)ன் கீழ் சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கின் சாட்சி விசாரணை, குறுக்கு விசாரணை ஆகியவற்றில் சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர்கள் ஆஜராக உள்ளனர். கூடுதல் சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் சி.எஸ்.எஸ்.பிள்ளை ஏற்கனவே தேசிய விசாரணை முகமையின் (என்ஐஏ) வழக்கறிஞராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அரசு தரப்பில் ஆஜராக சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமனம்: தமிழக அரசு ஆணை appeared first on Dinakaran.