ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 90 நாட்களில் எழும்பூர் நீதிமன்றத்தில் 30 பேர் மீது 5 ஆயிரம் பக்கம் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

3 months ago 21

* முதன்மை குற்றவாளிகளாக ரவுடிகள் நாகேந்திரன், சம்பவ செந்தில், அஸ்வத்தாமன் இடம்பெற்றுள்ளனர், 29 பேருக்கும் விரைவில் தண்டனை பெற்று தர பெருநகர காவல்துறை முயற்சி

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சென்னை பெருநகர காவல்துறை 90 நாட்களில் விரைந்து செயல்பட்டு கைது செய்யப்பட்ட 28 குற்றவாளிகள் உள்பட 30 பேர் மீது நேற்று எழும்பூர் நீதிமன்றத்தில் 5 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் முதன்மை குற்றவாளிகளான நாகேந்திரன், சம்பவ செந்தில், அஸ்வத்தாமன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் (51), கடந்த ஜூலை 5ம் தேதி வீட்டின் அருகே கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் சகோதரர் பொன்னை பாலு உள்பட 11 பேர் அடுத்தடுத்து அண்ணாநகர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். மேலும், வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய புதிய போலீஸ் கமிஷனர் அருண் மேற்பார்வையில் சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் நரேந்திரன் நாயர் தலைமையில் இணை கமிஷனர் விஜயகுமார், ஒரு துணை கமிஷனர், 4 உதவி கமிஷனர்கள், 10 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 50 பேர் கொண்ட 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

முன்னாள் பாஜ மாவட்ட மகளிர் அணி செயலாளராக இருந்த ரவுடி ஆற்காடு சுரேஷ் காதலியான அஞ்சலை, முன்னாள் அதிமுக வழக்கறிஞர் அணியை சேர்ந்த பிரபல ரவுடி தோட்டம் சேகர் மனைவி மலர்கொடி, முன்னாள் தமாகா வழக்கறிஞர் அணியை சேர்ந்த ஹரிதரன், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் அஸ்வத்தாமன், முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஹரிகரன், வடசென்னை பிரபல ரவுடி நாகேந்திரன் உள்பட 28 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இவர்களில் கூலிப்படை தலைவன் குன்றத்தூர் திருவேங்கடம், ஆயுதங்களை பறிமுதல் செய்ய அழைத்து சென்றபோது புழல் அருகே போலீசாரை மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிக்க முயன்றபோது என்கவுன்டர் செய்யப் பட்டார். அதேபோல், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு தமாகா முன்னாள் வழக்கறிஞர் அணியை சேர்ந்த ஹரிதரன் மற்றும் முன்னாள் அதிமுக வழக்கறிஞர் மலர்கொடி மூலம் கூலிப்படையாக செயல்பட்ட பொன்னை பாலு, திருவேங்கடத்திற்கு ரூ.50 லட்சம் வரை சம்பவ செந்தில் மூலம் பணம் கொடுத்து உதவியது தெரியவந்தது.

அந்த பணம் வழக்கறிஞரான மொட்டை கிருஷ்ணன் மூலம் கொடுக்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. தலைமறைவான ரவுடி சம்பவ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணனை போலீசார் தேடி வருகின்றனர். நாட்டு வெடிகுண்டுதயாரித்து வழங்கியதாக ரவுடி புதூர் அப்பு 28வது குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ளார். கைதான குற்றவாளிகளில் 10 பேர் வழக்கறிஞர்கள். போலீஸ் கமிஷனர் அருண் இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை பலகட்ட விசாரணைக்கு பிறகு கைது செய்துள்ளார்.

அதேநேரம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக பாஜ வழக்கறிஞரான பால்கனகராஜ், முன்னாள் பார் கவுன்சில் நிர்வாகி உள்ளிட்டோரிடம் விசாரித்து குற்றவாளிகளை போலீசார் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த வழக்கில் ஆற்காடு சுரேஷ் காதலி அஞ்சலை, அஸ்வத்தாமன் உள்பட 26 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கூலிப்படை தலைவன் குன்றத்தூர் திருவேங்கடம் என்கவுன்டர் செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆயுள் கைதியான நாகேந்திரன் வேலூர் சிறையில் இருப்பதால் அவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில், போலீஸ் கமிஷனர் அருண் இந்த வழக்கில் 90 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி செம்பியம் போலீசார் தனிப்படை உதவியுடன் ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்டுள்ள 28 பேர் மற்றும் தலைமறைவாக உள்ள சம்பவ செந்தில், மொட்டை கிருஷ்ணன் என மொத்தம் 30 பேரின் பங்களிப்புகள் என்ன என்பது குறித்தும், கொலையை நேரில் பார்த்த சாட்சிகள் 15 பேர் மற்றும் விசாரணை மூலம் 200 பேர் குற்றப்பத்திரிகையில் சாட்சிகளாக இணைத்துள்ளனர்.

கொலை நடந்த இடத்தில் பதிவான சிசிடிவி பதிவையும் வழக்கில் குற்றவாளிகளுக்கு வலுவான ஆதாரமாக சேர்த்துள்ளனர். கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் சாட்கிகளின் வாக்குமூலத்தின்படி 500 ஆவணங்களாக பிரித்து 5 ஆயிரம் பக்கங்கள் குற்றப்பத்திரிகை தயாரித்துள்ளனர். கொலை நடந்த இடத்தில் இருந்து எடுத்த ஒரு துப்பாக்கி, 5 குண்டுகள் குறித்த தகவலும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது.

இந்த குற்றப்பத்திரிகையை நேற்று காலை எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி தர்மராஜன் முன்பு செம்பியம் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி தலைமையிலான போலீசார் வேன்களில் ஏற்றி வந்து சமர்ப்பித்தனர். குற்றப்பத்திரிகையில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் முதன்மை குற்றவாளிகளாக பிரபல வடசென்னை ரவுடியும் ஆயுள் கைதியான நாகேந்திரன் ஏ1 ஆகவும், தலைமறைவாக உள்ள பிரபல ரவுடி சம்பவ செந்தில் ஏ2 ஆகவும், பிரபல ரவுடி நாகேந்திரன் மகனும் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியுமான அஸ்வத்தாமன் ஏ3 ஆகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கை பொறுத்தமட்டில் கொலை நடந்த 90 நாட்களில் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து இந்த வழக்கு விசாரணை விரைவில் நடைபெறும். அதைதொடர்ந்து இந்த வழக்கில் என்கவுன்டரில் கொலை செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம் தவிர்த்து மீதமுள்ள 29 குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் விரைவில் தண்டனை பெற்று தரப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் முக்கிய குற்றவாளிகளான சம்பவ செந்தில், மொட்டை கிருஷ்ணன் ஆகியோரையும் கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

* சிறையில் இருந்த ரவுடி நாகேந்திரன் ஏ1 குற்றவாளியாக மாறியது எப்படி?
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதன்மை குற்றவாளியாக வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியான பிரபல ரவுடி நாகேந்திரன் உள்ளதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாகவே ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்க அவரது சகோதரர் பொன்னை பாலு, மைத்துனர் அருள் உள்ளிட்டோர் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய காத்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு தேவையான பண வசதி, ஆட்கள் வசதி கிடைப்பதில் சிக்கல் இருந்தது.

மேலும் ஆம்ஸ்ட்ராங் தேசிய கட்சியின் மாநில தலைவர், எப்போதும் தன்னுடன் குறைந்தது 10 பேரை வைத்துக் கொண்டு வலம் வருபவர். அவரை கொலை செய்வது என்பது அவ்வளவு எளிதில் முடியாத நிலை இருந்தது. இதனால் ஆம்ஸ்ட்ராங்கிற்கு யார் எதிரி என பார்த்தார்கள், பல வருடங்களாகவே ஆர்ம்ஸ்ட்ராங்கிற்கும் பிரபல ரவுடி நாகேந்திரனுக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. ஆம்ஸ்ட்ராங்கின் நம்பிக்கைக்குரிய மாவட்ட செயலாளர் தென்னரசுவை கொலை செய்தது முதல் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் நாகேந்திரனுக்கும் நேரடி பகை இருந்து வந்தது.

மேலும் நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமனுக்கும் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் திருவள்ளூரில் உள்ள நிலம் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டு எந்த வழக்கிலும் சிக்காத அஸ்வத்தாமன் போலீஸ் பிடியில் சிக்கினார். அதுவும் துப்பாக்கியோடு சிக்கினார். இதற்கும் ஆம்ஸ்ட்ராங் தான் காரணம் என மிக வலுவாக நாகேந்திரன் நம்பினார். எனவே நாகேந்திரனை வைத்து இந்த கொலையை செய்தால் பிரச்னை வராது என்று எண்ணிய ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு மற்றும் மைத்துனர் அருள் ஆகியோர் அஸ்வத்தாமன் மூலமாக நாகேந்திரனை அணுகினர்.

நாகேந்திரனும் எப்போது சந்தர்ப்பம் வரும் என காத்திருந்தது போல ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்கு அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்துள்ளார். வெடிகுண்டு மற்றும் ஆட்களை தயார் செய்வது போன்ற வேலைகளை சம்பவ செந்தில் மூலமாகவும் மற்ற வேலைகளை தனது மகன் அஸ்வத்தாமன் மூலமாகவும் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் சம்பவ செந்தில் முன்னாள் பாஜ நிர்வாகியான அஞ்சலையிடம் தொலைபேசியில் பேசி ஒரு குறிப்பிட்ட தொகையை தரும்படி கூறியுள்ளார். அதேபோன்று அஞ்சலையும் ஒரு குறிப்பிட்ட தொகையை கொலையாளிகளுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் ஆற்காடு சுரேஷ் மைத்துனர் அருள், ஹரிகரன் போன்றவர்கள் பல்வேறு நபர்களை சந்தித்து இந்த கொலைக்காக பணத்தை வசூல் செய்ததற்கான ஆதாரங்களையும் போலீசார் திரட்டி வைத்துள்ளனர். இதனால் இந்த கொலைக்கு மூளையாக செயல்பட்ட நாகேந்திரனை முதன்மை குற்றவாளியாக சேர்த்துள்ளனர். மேலும் நாகேந்திரன் உடல்நல குறைவு என கூறி அடிக்கடி பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வரும்போது அவரை பொன்னை பாலு, அருள் உள்ளிட்டோர் சந்தித்து பேசியதற்கான வலுவான ஆதாரங்களையும் போலீசார் சேகரித்து அதனையும் இந்த வழக்கில் முக்கிய தடயமாக சேர்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 90 நாட்களில் எழும்பூர் நீதிமன்றத்தில் 30 பேர் மீது 5 ஆயிரம் பக்கம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் appeared first on Dinakaran.

Read Entire Article