ஆம்பூர்: ஆம்பூர் நகராட்சியில் இன்று தூய்மை பணியாளர் தாக்கப்பட்டதை கண்டித்து சக பணியாளர்கள் பணியை புறக்கணித்து போலீஸ் நிலையத்தில் குவிந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சியில் 36 வார்டுகளில் தூய்மை பணியாளர்கள் பணி மேற்கொண்டு வருகின்றனர். சில வார்டுகளில் தனியாரும், சில வார்டுகளில் நிரந்தர பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். ஆம்பூர் பஜார் நாகநாத சுவாமி கோயில் தெருவில் உள்ள மீன்கடை அருகே இன்று காலை தொழிலாளர்கள் சிலர் பணியில் ஈடுபட்டனர். அங்கு வைத்திருந்த குப்பை டப்பாக்களை பணியாளர் சம்பத், மற்றொரு பெண் பணியாளர் அகற்றியதாக தெரிகிறது. அப்போது அங்கிருந்த கடைக்காரர்கள் சிலர் அது எங்கள் கடை குப்பை டப்பா. அதை எதற்காக தூக்கிப்போடுகிறாய்’ எனக்கூறியுள்ளார்.
இதனால் ஏற்பட்ட தகராறில் சம்பத்தை தாக்கியுள்ளனர். இதில் காயம் அடைந்த சம்பத், பணி மேற்பார்வையாளரிடம் தெரிவித்தார். இதையறிந்த சக பணியாளர்கள் சுமார் 30 பேர், பணிகளை புறக்கணித்துவிட்டு ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் குவிந்தனர். அங்கு சம்பத்தை தாக்கிய 4 பேரை கைது செய்யக்கோரி போலீசாரிடம் கூறினர். தொடர்ந்து போலீசார், சம்பத்தை தாக்கியவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்ததால் சில வார்டுகளில் குப்பைகள் அள்ளப்படாமல் இருந்தது. இந்த சம்பவம் காரணமாக இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது.
The post ஆம்பூர் நகராட்சி பகுதியில் இன்று தூய்மை பணியாளர் மீது தாக்குதல்; சக பணியாளர்கள் போராட்டம்: போலீஸ் நிலையத்தில் குவிந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.