டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் இந்தியாவிற்கு முப்படைகளும் பெருமை சேர்த்துள்ளது என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ‘பஹல்காம் தாக்குதலுக்கு சரியான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. அப்பாவிகளை கொன்ற தீவிரவாதிகளுக்கு சரியான தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது’ என அவர் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா இன்று நள்ளிரவு 1.44 மணி முதல் அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக் குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில் இன்று அதிகாலை ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதலில் பாகிஸ் தானில் 90 பேர் பலியாகினர். மேலும் பாகிஸ்தானுக்குள் செயல்பட்ட 9 தீவிரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன.
இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது; “ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் நாட்டுக்கு நமது படைகள் ராணுவம் பெருமை சேர்த்துள்ளன. நேற்றிரவு இந்திய ராணுவம் தனது பலத்தை காண்பித்துள்ளது. இலக்குகளை துல்லியமாக மிக கவனத்துடன் நமது படைகள் தாக்கியுள்ளன. பஹல்காம் தாக்குதலுக்கு சரியான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
இலக்கு எதுவாக இருந்ததோ அதை துல்லியமாக தாக்கியுள்ளோம். மோடியின் தலைமையில், நமது படைகள் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை தொடங்கின. அப்பாவிகளை கொன்ற தீவிரவாதிகளுக்கு சரியான தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியா தனது மண்ணில் நடந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் உரிமையை பயன்படுத்தியுள்ளது. அப்பாவிகளை கொன்ற தீவிரவாதிகளின் புகலிடங்கள் அழிக்கப்பட்டுள்ளன.அசோக வனத்தை அழிக்கும் போது அனுமன் பின்பற்றிய லட்சியத்தை நாங்கள் பின்பற்றுகிறோம்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தான் மக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. தீவிரவாதிகளின் முகாம்களை குறி வைத்து மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எங்கள் நடவடிக்கை மிகுந்த சிந்தனையுடன், திட்டமிடப்பட்ட முறையில் எடுக்கப்பட்டுள்ளது. நமது படைகளின் துணிச்சலுக்கு மீண்டும் ஒருமுறை தலை வணங்குகிறேன். இன்று தொடங்கி வைக்கப்படும் திட்டங்கள் நாட்டின் எல்லையை வலுப்படுத்தும் வகையில் இருக்கும். இந்த திட்டங்களால் நாடு வளர்ச்சி பாதையில் பயணிக்கும். பாதுகாப்புப்படைகள் சுதந்திரமாக செயல்பட அனுமதித்த பிரதமர் மோடிக்கு நன்றி” என கூறியுள்ளார்.
The post ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் இந்தியாவிற்கு முப்படைகளும் பெருமை சேர்த்துள்ளது: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் appeared first on Dinakaran.