ஆப்பிள், காபி, அவகோடா… அரியலூரில் அம்சமாக விளையுது!

3 months ago 24

“மரங்கள் பேசும் என்பதை நான் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். அவை வாடி நிற்கும்போது தங்களுக்கு ஏதோ பிரச்னை என என்னிடம் சொல்ல வருவதை உணர்கிறேன். குளிர்ச்சியில், காற்றின் தீண்டலில் வாட்டமாக தலையாட்டும்போது அவை மகிழ்ச்சியாக இருப்பதை உணர்கிறேன் ‘’ என மிகவும் உணர்ச்சிபூர்வமாக பேசுகிறார் பழனிச்சாமி.கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இருந்து ஆண்டிமடம் செல்லும் சாலையில் கருக்கை என்ற இடத்தில் அமர்ந்திருக்கிறது பழனிச்சாமியின் நற்பவி வளர்சோலை. இந்த இடம் சரியாக கடலூர் மாவட்டமும், அரியலூர் மாவட்டமும் இணையும் எல்லைப் பகுதியை ஒட்டி அமைந்திருக்கிறது. வளங்கள் கொழிக்கும் சோலைக்காடு என குறிப்பதற்காக இந்தப் பெயரை தனது தோட்டத்திற்கு வைத்திருக்கிறார் பழனிச்சாமி. அவர் வைத்திருக்கும் பெயருக்கு சான்று பகர்வது போலவே இருக்கிறது அவரது தோட்டம். இந்தத் தோட்டம் ஐந்தரை ஏக்கர் பரப்பு கொண்டது. இதில் சுமார் 2 ஆயிரம் மரங்களுக்கு மேல் வளர்ந்து நிற்கின்றன. இவற்றுக்கு இடையே மஞ்சள், எலுமிச்சை, ஆப்பிள், அன்னாசி, மாதுளை உள்ளிட்ட பழங்கள் விளைந்து வாசம் வீசுகின்றன. வண்ணத்துப்பூச்சிகள், மண்புழுக்கள் மற்றும் ஊர்வன என பல உயிரினங்களும் வலம் வருகின்றன. பழங்களும், பல்லுயிர்களும் நிரம்பி இருக்கும் இந்தச் சோலையில் வளர்ந்து நிற்கும் மரங்கள்தான் பழனிச்சாமிக்கு பொழுதுபோக்கு, சொந்தபந்தம், நட்பு என எல்லாமுமாய் இருக்கின்றன. இதனால்தான் அவர் மரங்கள் குறித்து நெகிழ்ச்சியாக பேசுகிறார். கடந்த வாரத்தில் ஏப்ரல், மே மாதம் போல வெயில் சுட்டெரித்த ஒரு பகல்பொழுதில் பழனிச்சாமியின் தோட்டத்திற்குச் சென்றோம். தோட்டம் முழுக்க நிழல்தான். எங்கும் வெயில் இல்லை. அந்தளவுக்கு மரங்கள் வளர்ந்து பசுமைப்பந்தலாய் விரிந்திருக்கின்றன. அதன்கீழே ஒவ்வொரு பகுதிக்கும் சென்று பழனிச்சாமியுடன் உரையாடினோம்.

“ விருத்தாசலம் அருகில் உள்ள ஆலிச்சிக்குடிதான் எனக்கு சொந்த ஊர். இது எனது மனைவியின் ஊர். எங்கள் பகுதியில் நெல், கரும்பு போன்ற பயிர்களைச் சாகுபடி செய்வேன். இடையில் மரம் வளர்ப்பு குறித்து ஆர்வம் எழுந்தது. மனைவி ஊரில் உள்ள நிலத்தை நாமே கவனித்துக்கொள்ளும் சூழல் உருவானது. இதில் காடு உருவாக்க விரும்பினேன். அதன்படி கடந்த 2017ம் ஆண்டில் மரம் வளர்ப்பில் ஈடுபட்டேன். முதலில் இங்கு முந்திரி மரங்கள்தான் அதிகளவில் இருந்தன. அவற்றுக்கு இடையே பலா, மா மரங்களும் இருந்தன. இடையில் நான் தேக்கு உள்ளிட்ட மரங்களை வளர்க்க ஆரம்பித்தேன். அப்போது மரம் வளர்ப்பு குறித்து நிறைய அறிந்துகொண்டேன். இதனால் எனது மரம் வளர்க்கும் ஆசை அதிகரித்தது. இதனால் வேங்கை, மகோகனி, செம்மரம், அகர், ரோஸ்வுட், படாக், கருங்காலி, செங்காலி, பூவரசு, முள்ளில்லா மூங்கில், பாக்கு என பல வகையான மரங்களை வாங்கி வந்து வளர்த்து வருகிறேன். இப்போது அனைத்து மரங்களும் 10 அடி, 20 அடி தாண்டி வளர்ந்து நிற்கின்றன.

பலாவில் 22 வகை மரங்களை வைத்திருக்கிறேன். மாமரத்தில் 30 வகை வைத்திருக்கிறேன். மேலும் வாட்டர் ஆப்பிள், கொய்யா, பைனாப்பிள், ஸ்டார் ப்ரூட், சப்போட்டா, அவகோடா, ஆரஞ்சு, ரம்புட்டான் உள்ளிட்ட பழச்செடிகளும் வைத்திருக்கிறேன். எங்கு பார்த்தாலும் மரங்கள் மயம்தான். தோட்டம் முழுக்க நிழல் இருக்கும். இதனால் மலைப்பிரதேசங்களில் விளையும் பழங்கள் கூட இங்கு வளர்ந்து பலன் தருகிறது. பல விதமான மரங்களில் மிளகுக்கொடிகளை ஏற்றி விட்டிருக்கிறேன். அவை நல்ல மகசூல் தருகின்றன. எந்தப் பயிருக்கும் நான் ரசாயன உரமோ, மருந்தோ கொடுப்பது இல்லை. எல்லாமே இயற்கை இடுபொருட்கள்தான். அவற்றை பாசன நீரில் கொடுத்து விடுகிறேன். ரசாயம் எதுவும் இல்லாததால் தோட்டத்தில் பல்லுயிர்ச்சூழல் நன்றாக இருக்கிறது. இங்கு பலவிதமான பட்டாம்பூச்சிகள் வருகின்றன. மண்புழுக்கள் புழங்குகின்றன. டிம்பர் வேல்யூ மரங்கள் அதிகளவில் இருந்தாலும் பழமரங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறோம். இதை ஒரு முழுமையான உணவுக்காடாக மாற்ற விரும்புகிறோம். இங்கு 100 விதமான பழங்கள் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து இருக்கிறோம். இப்போது 60 வகையான பழங்கள் இருக்கின்றன.

விரைவாக 100 என்ற இலக்கை எட்டுவோம். இப்போது இங்கு விளையும் பழங்களை தோட்டத்திலேயே விற்பனை செய்கிறோம். இந்தப் பகுதி மக்களுக்கு மிகக் குறைந்த விலையில் தருகிறோம். முழுமையான இயற்கை முறையில் விளைவிக்கப்படும் பழம் என்பதால் மக்கள் விரும்பி வாங்கி செல்கிறார்கள். விரைவில் இங்கு பெரிய அளவில் கடை அமைக்க இருக்கிறோம். இங்கு மேலும் பல பழ வகைகளை விளைவித்து மக்களுக்கு வழங்க இருக்கிறோம். அவர்கள் வந்தால் மரம் வளர்ப்பு, காடு உருவாக்கம் போன்ற செயல்பாடுகளால் இவ்வளவு நன்மை இருக்கிறதா? என உணர்ந்து செல்ல வேண்டும். அதற்கான எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறோம்’’ என நெகிழ்ச்சியாக பேசும் பழனிச்சாமி மேலும் சில தகவல்களையும் பகிர்ந்துகொண்டார்.

“மரங்களின் மகத்துவத்தைப் பலர் எடுத்துக் கூறி வருகிறார்கள். இருந்தாலும் மரம் வளர்ப்பு குறைவாகத்தான் இருக்கிறது. விவசாயிகள் ஒரு ஏக்கரோ, அதற்கும் குறைவாகவோ நிலம் வைத்திருந்தால் கூட வரப்பு ஓரங்களில் மரங்களை வளர்க்கலாம். 5 ஏக்கர் வைத்திருந்தால் 2 ஏக்கரில் மரம் வளர்க்கலாம். நாட்டில் 33 சதவீதம் காடுகள் இருக்க வேண்டும் என அரசு சொல்கிறது. இதை அரசே நேரடியாக செய்ய முடியாது. நாமும் நமது பங்களிப்பை செய்ய வேண்டும். உங்களுக்கு எளிதாக கிடைக்கும் பலா, பூவரசு போன்ற மரங்களைக் கூட வளர்க்கலாம். பலா இருக்கும் வரை பழம் தரும். வெட்டினால் நல்ல டிம்பர் வேல்யூ கொண்டதாக இருக்கும். இது காஸ்ட்லியானதும் கூட. எனது நிலம் ஐந்தரை ஏக்கர் பரப்பு கொண்டதுதான். ஆனால் இப்போது 5 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பு கொண்ட மரங்கள் இந்த நிலத்தில் உள்ளன. இன்னும் ஆண்டுகள் செல்லச் செல்ல அதன் மதிப்பு பலமடங்கு அதிகரிக்கும். நாம் ஒரு மரம் வெட்டினால், அதற்கு ஈடாக மற்றொரு மரத்தை வைக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருக்க வேண்டும்’’ என பொறுப்பாக பேசி முடித்தார்.
தொடர்புக்கு:
பழனிச்சாமி – 93677 95559.

* அரியலூர் மாவட்டம் பொதுவாக வறட்சி நிலவும் மாவட்டமாகத்தான் இருக்கும். கருக்கை பகுதியும் அப்படித்தான். இத்தகைய ஊரில் இந்தத் தோட்டம் மிக பசுமையான தோட்டமாக காட்சி அளிக்கிறது.
*இந்தத் தோட்டத்தில் நிலவும் சீதோஷ்ண நிலை காரணமாக காபி, அவகோடா, ஜாதிக்காய் போன்ற மலைப்பிரதேசப் பயிர்களும் விளைவிக்கப்படுகின்றன. அவை காய்த்து பலன் தரவும் தொடங்கி இருக்கின்றன.
* மரங்களை வளர்த்தால் நீண்ட காலத்திற்கு பிறகே பலன் கிடைக்கும் என சிலர் நினைக்கிறார்கள். ஆனால் மரங்களுக்கு இடையேயும் பல பயிர்களைச் சாகுபடி செய்ய முடியும். குறிப்பாக மஞ்சள், அன்னாசி போன்ற பயிர்களை சாகுபடி செய்து உபரி வருமானம் பார்க்கலாம் என்பதற்கு சான்றாகவும் விளங்குகிறது இந்தத் தோட்டம்.

The post ஆப்பிள், காபி, அவகோடா… அரியலூரில் அம்சமாக விளையுது! appeared first on Dinakaran.

Read Entire Article