பெர்த்,
இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்த தொடரில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நெருக்கடிக்கு மத்தியில் இந்தியா விளையாட உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த இரு டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி வரலாறு படைத்தது. இப்போது 'ஹாட்ரிக்' வெற்றிக்கு குறி வைத்துள்ளது. ஆனால் இந்த முறை இந்தியாவின் சவாலை நிச்சயம் முறியடிப்போம் என்று ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் கூறியுள்ளார்.
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் ஆப் ஸ்பின்னர்களுக்கு எதிராக அவுட்டாவதை நான் விரும்ப மாட்டேன் என்றும், கடந்த முறை போல இம்முறை தம்மை அஸ்வினால் எளிதாக அவுட்டாக்க முடியாது என்றும் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, கடந்த தொடரில் முதல் போட்டியில் அஸ்வின் என்னை எட்ஜ் முறையில் அவுட்டாக்கி இரண்டாவது போட்டியில் லெக் ஸ்லிப்பில் அவுட்டாக்கினார்.
பொதுவாக நான் ஆஸ்திரேலியாவில் ஆப் ஸ்பின்னர்களுக்கு எதிராக அவுட்டாவதை விரும்ப மாட்டேன். ஏனெனில் வலது கை பேட்ஸ்மேனாக நீங்கள் இருக்கும் போது அவர்களை எதிர்கொள்வது சுலபமாக இருக்கும். ஆனால் நல்ல பவுலரான அஸ்வின் ஓரளவு நல்ல திட்டத்துடன் வருவார். இருப்பினும் கடந்த தொடரிலேயே 3வது போட்டியில் சிட்னி மைதானத்தில் அவருக்கு எதிராக நான் கொஞ்சம் சிறப்பாக விளையாடினேன். அதுதான் இம்முறை எனக்கான சாவி. இம்முறை எப்படி பந்து வீசினாலும் அவரை நான் செட்டிலாக விடாமல் பேட்டிங் செய்வேன்.
5 போட்டிகள் கொண்ட தொடரில் நீங்கள் விளையாடும் போது ஏதேனும் ஒரு பவுலருக்கு எதிராக ஆரம்பத்திலேயே நீங்கள் தடுமாறினால் பின்னர் 10 இன்னிங்ஸில் அவருக்கு எதிராக விளையாட வேண்டும். எனவே மனதளவில் நீங்கள் அது போன்ற சவாலை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை போல 5 போட்டிகள் கொண்ட தொடரில் நீங்கள் விளையாட முடியாது. அஸ்வினும் நானும் கடந்த பல வருடங்களில் நல்ல போட்டியை கொண்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.