ஆபரேஷன் சிந்தூர் வெற்றி.. விமானப் படை வீரர்களுக்கு நேரில் சென்று பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி..!!

4 hours ago 2

ஜலந்தர்: பஞ்சாப் மாநிலம் ஆதம்பூர் விமானப் படை தளத்தில் வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். இந்தியா- பாகிஸ்தான் இடையே நிலவிய போர் பதற்றத்தில், நமது ராணுவ வீரர்கள் பணியாற்றிய விதம் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் பாகிஸ்தானில் பயங்கரவாத நிலைகளை குறிவைத்து தகர்த்தது. இதைத்தொடர்ந்து இரு நாட்களுக்கும் இடையே போர் பதற்றம் நீடித்தது. இதையடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.

இந்நிலையில், போர் பதற்றம் ஓய்ந்ததை தொடர்ந்து இன்று ஜலந்தரில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார். அங்கு விமானப்படை வீரர்களை சந்தித்த அவர், துணிச்சல் மிகு வீரர்களிடம் கலந்துரையாடினார். தீவரவாதிகளை ஒழிப்பதற்கான ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்ற வீரர்களுக்கு மோடி பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து விமானப்படை வீரர்களுடன் பிரதமர் மோடி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது; இன்று காலை, ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு சென்று நமது துணிச்சலான விமான படை வீரர்களைச் சந்தித்தேன். துணிச்சல், உறுதிப்பாடு மற்றும் அச்சமின்மை ஆகியவற்றின் உருவகமாக இருப்பவர்களுடன் இருந்தது மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது. நமது நாட்டிற்காக நமது வீரர்கள் செய்யும் அனைத்திற்கும் இந்தியா என்றென்றும் நன்றியுடன் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post ஆபரேஷன் சிந்தூர் வெற்றி.. விமானப் படை வீரர்களுக்கு நேரில் சென்று பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி..!! appeared first on Dinakaran.

Read Entire Article