
புதுடெல்லி,
காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக மே 7-ந்தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கி வந்த 9 பயங்கரவாத முகாம்களை 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் இந்திய ராணுவம் துல்லியமாக தாக்கி அழித்தது.
இந்த சம்பவத்திற்கு பின்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவானது. எல்லையில் 4 நாட்களுக்கு இருநாட்டு படைகளுக்கு இடையே மோதல் நீடித்தது. பின்னர் மோதல் நிறுத்தம் தொடர்பான புரிந்துணர்வு ஏற்பட்டதை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வந்தது. இருப்பினும் 'ஆபரேஷன் சிந்தூர்' தற்காலிகமாகவே நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
முன்னதாக 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயருக்கான லோகோவை இந்திய ராணுவம் வெளியிட்டிருந்தது. அதில் இந்து பெண்கள் தங்கள் நெற்றியில் அணியும் குங்குமம் சிதறிக்கிடப்பது போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது. பஹல்காமில் தங்கள் கணவரை இழந்த பெண்களுக்காக இந்திய ராணுவம் மேற்கொள்ளும் பதிலடி நடவடிக்கைதான் இந்த 'ஆபரேஷன் சிந்தூர்' என்பதை உணர்த்தும் வகையில் அந்த லோகோ அமைந்திருந்தது.
இந்த லோகோ இந்திய மக்களின் உணர்ச்சியை பிரதிபலிக்கும் வகையிலும் அமைந்திருந்தது. பலர் இதனை தங்கள் சமூக வலைதளங்களில் முகப்பு பக்க புகைப்படமாக வைத்தனர். இந்நிலையில், 'ஆபரேஷன் சிந்தூர்' லோகோவை வடிவமைத்தவர்கள் யார்? என்ற தகவலை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, இந்திய ராணுவத்தை சேர்ந்த லெப்டினண்ட் கர்னல் ஹர்ஷ் குப்தா மற்றும் ஹவில்தார் சுரேந்தர் சிங் ஆகிய இருவரும் சேர்ந்து 'ஆபரேஷன் சிந்தூர்' லோகோவை வடிவமைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே 7-ந்தேதி, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய சிறிது நேரத்தில், நள்ளிரவு 1.51 மணிக்கு இந்திய ராணுவத்தின் 'எக்ஸ்' தள பக்கத்தில் இந்த லோகோ வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.