ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை கனிமொழி தலைமையிலான குழு ரஷ்யாவிடம் விளக்கம்: இந்தியாவுக்கு முழு ஆதரவு

1 day ago 4

மாஸ்கோ: பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மற்றும் இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் குறித்து சர்வதேச நாடுகளுக்கு விளக்குவதற்காக, அனைத்துக்கட்சி எம்பிக்கள் அடங்கிய 7 குழுக்கள் அமைக்கப்பட்டன.

அந்த வகையில் திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் கனிமொழி எம்பி தலைமையில் ஒரு எம்பிக்கள் குழுவினர் ரஷ்யா சென்றனர். மாஸ்கோ நகரில் ரஷ்ய கூட்டமைப்பின் துணை வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரேருடென்கோவை இந்திய எம்பிக்கள் குழுவினர் சந்தித்து பேசினார்கள். மேலும் லிபரல்-ஜனநாயகக் கட்சியின் கீழ் சபை சர்வதேச விவகாரக் குழுவின் தலைவர் லியோனிட் ஸ்லட்ஸ்கி தலைமையிலான ரஷ்ய எம்பிக்கள் அனைத்துக் கட்சி உறுப்பினர்களுடன் வட்டமேசைக் கூட்டத்தில் கனிமொழி எம்பி தலைமையிலான எம்பிக்கள் குழுவினர் விரிவாக ஆலோசனை நடத்தினர்.

அப்போது பஹல்காம் தாக்குதல் குறித்தும், ஆபரேஷன் சிந்தூர் குறித்து இந்திய எம்பிக்கள் குழுவினர் விளக்கி கூறினர். இதுபற்றி குழுத்தலைவர் கனிமொழி எம்பி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,’அனைத்து வகையான பயங்கரவாதத்தையும், தோற்கடிப்பதற்கான இந்தியாவின் தெளிவான மற்றும் நிபந்தனையற்ற உறுதியையும், அதை ஒழிப்பதற்கான நமது சமரசமற்ற நிலைப்பாட்டையும் தேசிய உறுதியையும் வலியுறுத்தி, சர்வதேச விவகாரங்களுக்கான ரஷ்ய எம்பிக்கள் குழுவின் தலைவர் லியோனிட் ஸ்லட்ஸ்கி மற்றும் உறுப்பினர்களிடம், இந்தியாவின் அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு விளக்கி கூறியது’ என்று தெரிவித்துள்ளார்.

ரஷ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில்,’ பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் ஒழிப்பதற்காக ரஷ்யா இந்தியாவுடன் ஒற்றுமையாக நிற்கிறது ’ என்று தெரிவித்துள்ளது.

* 40 நிமிடம் நடுவானில் தவித்த விமானம்

திமுக எம்பி கனிமொழி தலைமையிலான எம்பிக்கள் குழுவினர் டெல்லியில் இருந்து ரஷ்யா புறப்பட்டு சென்றனர். ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் நேற்றும் கனிமொழி தலைமையிலான இந்திய எம்பிக்கள் சென்ற விமானம் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கு உக்ரைன் ராணுவம் நடத்திய டிரோன் தாக்குதல் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் ரஷ்யாவின் முக்கிய நகரங்களை குறிவைத்து உக்ரைன் அதிக எண்ணிக்ைகயில் டிரோன்கள் அனுப்பியதால் உடனடியாக மாஸ்கோ உள்பட ரஷ்யாவின் பல்வேறு நகரங்களில் விமான நிலையங்கள் மூடப்பட்டன.

இதனால் 153 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. அந்த நேரத்தில் கனிமொழி எம்பி தலைமையிலான குழுவினர் வந்த விமானமும் மாஸ்கோ சென்றடைந்தது. டிரோன் தாக்குதலை தொடர்ந்து சுமார் 40 நிமிட தாமதத்திற்கு பிறகு பாதுகாப்பாக கனிமொழி தலைமையிலான எம்பிக்கள் குழு சென்ற விமானம் மாஸ்கோ விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

 

The post ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை கனிமொழி தலைமையிலான குழு ரஷ்யாவிடம் விளக்கம்: இந்தியாவுக்கு முழு ஆதரவு appeared first on Dinakaran.

Read Entire Article