லாகூர்: ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் அழிக்கப்பட்ட முரிட்கேயில் உள்ள ஜமாத் உத் தவா தீவிரவாத அமைப்பின் தலைமையகத்தை மீண்டும் கட்டித் தருவதாக பாகிஸ்தான் அரசு உறுதி அளித்துள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 7ம் தேதி பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் ஹெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் கோட்டையான பஹாவல்பூர் மற்றும் முரிட்கேயில் உள்ள லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தளங்கள் உட்பட 9 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. லாகூரில் இருந்து 40 கிமீ தொலைவில் உள்ள முரிட்கேயில் நடந்த தாக்குதலில் ஒரு மசூதியும், கல்வி வளாகமும் சேதமடைந்ததாக பாகிஸ்தான் கூறியது. இங்கு தான், தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான ஜமாத் உத் தவாவின் தலைமையகம் செயல்பட்டு வந்தது.
மேலும், இந்த அமைப்பின் 3 முக்கிய தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவ, காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றது சர்ச்சையானது. லஷ்கர் இ தொய்பா உடன் தொடர்புடைய ஜமாத் உத் தவா அமைப்பு இந்தியாவில் நடந்த பல்வேறு நாசவேலைக்கு காரணமானது. மும்பை தீவிரவாத தாக்குதலிலும் சம்மந்தப்பட்டது. இந்நிலையில், ஜமாத் உத் தவா அமைப்பின் தலைமையகம் செயல்பட்ட மசூதி மற்றும் கல்வி வளாகத்தை மீண்டும் கட்டித் தருவதாக பாகிஸ்தான் அரசு உறுதி அளித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் அரசியல் பிரிவான பாகிஸ்தான் மர்காஜி முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காலித் மசூத் சிந்து வெளியிட்ட அறிக்கையில், ‘‘இந்தியாவின் தாக்குதலில் அழிக்கப்பட்ட மசூதிகளை மீண்டும் கட்டித் தருவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்க நடவடிக்கை.
நமது நாட்டின் தியாகிகளை நாங்கள் மறக்கவில்லை, ஒருபோதும் மறக்க மாட்டோம். கட்சி தொண்டர்கள் ஒவ்வொருவரும் விழிப்புடனும் நாட்டைப் பாதுகாக்க எப்போதும் தயாராகவும் இருக்கிறார்கள்’’ என்றார். பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீறி சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு ரூ.8,500 கோடி கடன் வழங்க கடந்த இரு தினங்களுக்கு முன் சம்மதித்தது. இந்த நிதியின் மூலம் முரிட்கே மற்றும் பஹாவல்பூரில் தீவிரவாத உள்கட்டமைப்புகளை மீண்டும் கட்டியெழுப்ப பாகிஸ்தான் அரசு நிதி உதவி அறிவித்துள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டி இருந்தார். இந்த சூழலில் தற்போது அது உறுதியாகி உள்ளது.
The post ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் அழிக்கப்பட்ட தீவிரவாத அமைப்பின் தலைமையகத்தை மீண்டும் கட்டி தருவதாக பாக். அரசு உறுதி: சர்வதேச நிதியத்திடம் வாங்கிய கடனில் செலவு? appeared first on Dinakaran.