
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் சிவமொக்காவை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயரான கே.ஏ. மூர்த்தி என்ற இளைஞரின் வாழ்க்கை, ஆன்லைன் சூதாட்டத்திற்கு ஒருவர் அடிமையாவதால், எவ்வாறு தொழில், குடும்பம் மற்றும் எதிர்காலம் அழிக்கக்கூடும் என்பதற்கு ஒரு சோகமான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
சிவமொக்கா (மாவட்டம்) டவுன் பகுதியை சேர்ந்தவர் கே.ஏ.மூர்த்தி (வயது 27). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இதனால் அவர் பெங்களூருவிலேயே வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து வந்தார். அவரது பெற்றோர் சிவமொக்காவில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் மூர்த்தி ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி இருந்தார். இதில் அவர் பல லட்சம் ரூபாயை இழந்தார். இதையடுத்து அவர் கடன் வாங்கி சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் அவர் கடனாளி ஆனார். இதை அறிந்த அவரது பெற்றோர், சிவமொக்காவில் உள்ள வீட்டை விற்று மூர்த்தியிடம் கடனை அடைக்கும்படி கொடுத்துள்ளனர்.
மேலும் மூர்த்தியின் பெற்றோரும் பெங்களூருவில் அவருடன் குடியேறினர். இதற்கிடையே சூதாட்டம் மற்றும் கடன் தொல்லையால் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய மூர்த்தி திருட்டில் ஈடுபடத் தொடங்கினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு டேங்க் பண்ட் ரோடு சுபாஷ் நகரில் உள்ள அங்காளபரமேஸ்வரி கோவிலுக்கு வந்த பெண் பக்தரிடம் தங்கசங்கிலியை பறித்து சென்றிருந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் மாகடி ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் பெண் பக்தரிடம் சங்கிலி பறித்தது மூர்த்தி தான் என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து போலீசார் விசாரித்தனர்.
இதில் அவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து கடனில் சிக்கியதால், திருட்டில் ஈடுபட்டு வந்ததும், இவர் மீது கோனனகுண்டே பாளையா, அவலஹள்ளி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் வீடு புகுந்து திருடிய வழக்குகள் பதிவாகி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.17 லட்சம் மதிப்பிலான 245 கிராம் தங்க நகைகளை போலீசார் மீட்டனர்.