ஆன்லைன் கும்பல் கைவரிசை புதுச்சேரியில் 9 பேரிடம் ரூ.5.57 லட்சம் மோசடி: சைபர் கிரைம் போலீசார் விசாரணை

4 weeks ago 5

 

புதுச்சேரி, டிச. 16: புதுச்சேரியில் ஆன்லைன் கும்பலின் ஆசை வார்த்தைகளை நம்பி 2 பெண்கள் உள்பட 9 பேர் ரூ.5.57 லட்சத்தை இழந்துள்ளனர். இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி மோரிசன் வீதியை சேர்ந்த முருகன், கிருஷ்ணா நகரை சேர்ந்த விஷ்வெல், காரைக்கால் நிரவியை சேர்ந்த தினேஷ்குமார் ஆகியோரை தெரியாத நபர்கள் தொடர்பு கொண்டு ஆன்லைனில் முதலீடு செய்து அதிகம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

இதை நம்பி முருகன் ரூ.1.75 லட்சமும், விஷ்வெல் ரூ.51 ஆயிரமும், தினேஷ்குமார் ரூ.50 ஆயிரமும் முதலீடு செய்துள்ளனர். பின்னர், அவர்கள் சம்பாதித்த பணத்தை எடுக்க முடியவில்லை. அதன் பிறகு, அவர்கள் மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. விநாயகம்பட்டு கிராமத்தை சேர்ந்த முரளி என்பவரை தெரியாத நபர் தொடர்பு ெகாண்டு பிரபல வங்கியின் லோன் அலுவலர் போல் ஆள்மாறாட்டம் செய்து பேசியுள்ளார். அப்போது, குறைந்த வட்டிக்கு ரூ.5 லட்சம் கடன் தருவதாகவும், இதற்கு செயலாக்க கட்டணம் செலுத்த வேண்டும் என கூறியிருக்கிறார். இதை நம்பி முரளி ரூ.73 ஆயிரத்தை அனுப்பி ஏமாந்துள்ளார்.

மேட்டுப்பாளையத்ைதச் சேர்ந்த இந்துஜா என்ற பெண் ஆன்லைனில் ரூ.200க்கு அழகுசாதன பொருட்கள் ஆர்டர் செய்துள்ளார். பிறகு, அவரை தெரியாத நபர் தொடர்பு கொண்டு கூரியர் நிறுவன ஊழியர் போல் ஆள்மாறாட்டம் செய்து பேசியுள்ளார். அப்போது, இந்துஜாவின் செல்போனில் ஏபிகே என்ற செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் பொருளை டெலிவரி செய்வதற்கான முகவரியை பதிவிடுமாறு வற்புறுத்தியுள்ளார்.

அதன்படி, இந்துஜா செய்து முடித்தவுடன் அவரது வங்கி கணக்கில் இருந்து மோசடியாக ரூ.99,000 எடுக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். காரைக்கால் டி.ஆர்.பட்டினத்தை சேர்ந்த கீதா என்பவரின் வங்கி கணக்கில் இருந்து அவருக்கே தெரியாமல் ரூ.73 ஆயிரம் மோசடியாக எடுக்கப்பட்டுள்ளது. கருவடிக்குப்பத்தைச் சேர்ந்த புஷ்பராஜ் என்பவரை தெரியாத நபர் தொடர்பு கொண்டு மும்பை போலீஸ் அதிகாரி போல் ஆள்மாறாட்டம் செய்து பேசியுள்ளார்.

அப்போது, புஷ்பராஜ் பண மோசடியில் ஈடுபட்டதாகவும், அவர் மீது சைபர் கிரைமில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இதுதொடர்பான விசாரணைக்கு புஷ்பராஜை வீடியோ கால் மூலம் ஆஜராக வைத்து ரூ.19 ஆயிரத்தை ஏமாற்றி பறித்துள்ளனர். மேற்கூறிய நபர்கள் உள்பட 9 பேரிடம் ரூ.5 லட்சத்து 57 ஆயிரத்து 427ஐ மோசடி கும்பல் ஏமாற்றி பறித்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர்கள் தனித்தனியாக சைபர் கிரைம் காவல் நிலைத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆன்லைன் கும்பல் கைவரிசை புதுச்சேரியில் 9 பேரிடம் ரூ.5.57 லட்சம் மோசடி: சைபர் கிரைம் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Read Entire Article