
ரஜோரி,
இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருபவர் சுக்சரண் சிங் (வயது 30). பஞ்சாப்பின் முக்த்சார் சாகிப் பகுதியை சேர்ந்தவர். ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பணியாற்றி வரும் இவர், 10 ஆண்டு கால பணி அனுபவம் உள்ளவர். இந்நிலையில், ஜலந்தர் நகரில் உள்ள யூ-டியூபர் ரோஜர் சந்து என்பவர் மீது எறிகுண்டு வீசப்பட்டு உள்ளது.
இந்த வழக்கில் சிங்குக்கு தொடர்பு உள்ளது என குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, பஞ்சாப் போலீசார் ரஜோரியில் வைத்து அவரை கைது செய்தனர்.
இதுபற்றி போலீசார் கூறும்போது, ஹர்திக் கம்போஜ் என்பவருடன் இன்ஸ்டாகிராமில் சிங் தொடர்பு ஏற்படுத்தி உள்ளார். இதில், எறிகுண்டுகளை எப்படி வீசுவது என்பது பற்றி கம்போஜுக்கு ஆன்லைன் வழியே சிங் பயிற்சி அளித்து வந்திருக்கிறார்.
இதற்காக, தொடக்கத்தில் போலியான எறிகுண்டு ஒன்றை பயன்படுத்தி இருக்கிறார். பின்னர், உண்மையான எறிகுண்டை வைத்து பயிற்சி கொடுத்திருக்கிறார் என தெரிவித்தனர். இதற்கான சான்றுகளை ராணுவ அதிகாரிகளிடம் போலீசார் அளித்ததும், அவர்களிடம் சிங்கை கடந்த 14-ந்தேதி அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
இதன்பின்னர் சிங்கை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி விசாரணைக்காக 5 நாட்கள் காவலில் எடுத்துள்ளனர். இதில் சந்தேகத்திற்குரிய 9 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மொத்தம் 18 பேர் இந்த பெயர் பட்டியலில் உள்ளனர்.
யூ-டியூபர் மீது தாக்குதல் நடத்தியதற்கு பாகிஸ்தானை சேர்ந்த ஷெஷாத் பாட்டி பொறுப்பேற்று கொண்டார். பஞ்சாபில் 6 மாதங்களாக தொடர்ச்சியாக எறிகுண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றன.