ஊத்துக்கோட்டை, ஏப்.27: கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு கடந்த மாதம் திறக்கப்பட்ட தண்ணீர், தற்போது, கிருஷ்ணா கால்வாயில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு கங்கா நதிநீர் ஒப்பந்தப்படி 15 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும். இதில், 3 டிஎம்சி சேதாரம் போக, ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி என 12 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும்.
ஆந்திர அரசின் நீர்வளத்துறை அதிகாரிகள் கடந்த ஜனவரி மாதம் திறக்க வேண்டிய தண்ணீரை தமிழகத்திற்கு திறக்காததால், தமிழக அரசின் நீர்வளத்துறை அதிகாரிகள் ஆந்திர பொதுப்பனித்துறை அதிகாரிகளுக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கடிதம் எழுதினர். இதையடுத்து, தமிழக அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த மாதம் 24ம் தேதி வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர், கண்டலேறுவில் திறக்கப்பட்ட தண்ணீர் 152 கி.மீ கடந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டிற்கு கடந்த மாதம் 28ம் தேதி வந்தடைந்தது.
இந்நிலையில், கண்டலேறு அணையில் கூடுதலாக 300 கன அடி வீதம் 800 கன அடியாகவும், பின்னர் படிப்படியாக உயர்த்தி தற்போது 1,340 கன அடியாகவும் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டிற்கு கடந்த வாரம் 316 கன அடியாகவும் தண்ணீர் அதிகரித்து வந்து கொண்டிருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் திடீரென தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, கிருஷ்ணா கால்வாயில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் தற்காலிகமாக தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. இதுவரை பூண்டி ஏரிக்கு 500 மில்லியன் கன அடி (அரை டிஎம்சி) தண்ணீர் கிடைத்துள்ளது என்றனர்.
The post ஆந்திராவில் கால்வாய் சீரமைப்பு பணி பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் நிறுத்தம் appeared first on Dinakaran.