ஆதிபராசக்தி அருளாட்சி புரியும் 64 சக்தி பீடங்கள்

1 month ago 5

அன்னை பராசக்தியை ஒன்பது நாட்கள் வணங்குவதையே நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம். சக்திகள் மூன்று வகையாக பிரிக்கப்படுகிறது. வலிமை, செல்வம், கல்வி இந்த மூன்று சக்தியையும் நமக்கு தருபவள் பராசக்தி. வலிமையைக் கொடுக்கும் சக்தியை பார்வதிதேவி என்று சொல்லுகிறோம். முதல் மூன்று நாட்கள் பார்வதி தேவியை வணங்குகிறோம். அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவியை வழிபடுகிறோம். கடைசி மூன்று நாட்கள் பராசக்தியை, சரஸ்வதி தேவியாக வழிபடுகிறோம். பத்தாவது நாளை விஜய தசமி என்று சிறப்பாகக் கொண்டாடுகிறோம். உலகுக்கே தாயாக விளங்கும் அன்னையை வழிபடும் நாளே நவராத்தி நாள். அண்ட கோடி மக்களையும் ஈன்ற தாயாகிய தேவியை, கன்னி என்று வேதங்கள் கூறுகின்றன.

இப்படிப்பட்ட தாயாகிய தேவியை நவராத்திரி ஒன்பது நாட்களும் வழிபட்டால், எல்லா நன்மைகளும் நாடிவரும். ஆதிபராசக்தி ஆனவள், சிவனுடைய சக்தியை உடலிலும், பிரம்மாவுடைய சக்தியை நாக்கிலும், திருமாலின் சக்தியை மார்பிலும் உறைவிடமாய் கொண்டுள்ளதால், இந்த சக்தி வழிபாட்டை நாம் சிறப்பாக கொண்டாடுகிறோம். லலிதா சகஸ்ரநாமத்தில், பரதேவதையைப் பற்றி கூறும் போது, அவளே சிருஷ்டி செய்பவள் என்று வர்ணிக்கப்படுகிறது.

பரமாத்மாவும், ஜீவாத்மாவும் ஒன்று என்பது சத்தியம், அதுவே தேவி. ‘‘தத்வமசி’’ என்பது அத்வைத சித்தாந்தம். தேவியே அத்வைத சித்தாந்த வடிவமாய் இருக்கிறாள். துர்க்கையாக இருக்கும் பராசக்தியேதான் லட்சுமி தேவியாகவும், சரஸ்வதி தேவியாகவும் இருக்கிறாள். அதில் ‘‘பிரம்மா, விஷ்ணு, சிவாத்மி காயை நம’’ என்று வருகிறது. சரஸ்வதி அஷ்டோத்திரத்திலும், ‘‘பிரம்மா, விஷ்ணு சிவாத்மி காயை நமஹ’’ என்று வருகிறது. ஒரே சக்தியே பல ரூபங்களில் காட்சி கொடுக்கிறாள், அவளே பராசக்தி! ஆதிபராசக்தியின் பீடங்கள் 1400,108,64,51,39,18,3 எனச் சான்றோர் வகுத் துள்ளனர்.

பிரதான மூன்று பீடங்களிலே காமராஜ = காமகோடி பீடமான காஞ்சி ஸ்ரீ காமாட்சி சந்நதி உலகெங்கும் போற்றப்படுவதாகும். ‘காமம்’ என்பது போகம், வைபோகம்: வாழ்வுக்கான சகல சௌபாக்கியங்களையும், தருபவள், இந்த காம கோட்டத்துக் காமாட்சியம்மன். ‘கா’ சரஸ்வதி, ‘மா’ லட்சுமி, ‘அட்சி’ கண் என்பர். சரஸ்வதியையும், லட்சுமியையும் இருவிழிகளாகக் கொண்டவள் காமாட்சி. எனவே கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றையும் ஒரு சேர வழங்கும் பராசக்தியாக விளங்குபவள் அன்னை காமாட்சி!

வசந்த காலமும், சரத்காலமும் யமனின் கோரைப் பற்களைப் போன்றவை இவ்விருகாலங்களும் மானிடர்களுக்கு மகிழ்ச்சியையும் குதூகலத்தையும் அளிப்பதால், இவ்விருகாலங்களும் தெய்வத்தின் அருள் மனிதருக்குக் கிடைக்காதவாறு தடை செய்யக்கூடியவை. அதனால், இக்காலங்களில் முப்பெருந்தேவியரைப் போற்றி. தேவி பூஜையாக – நவராத்திரி பூஜை செய்து வழிபட வேண்டும் என சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன. ஒவ்வொரு தேவிக்கும் மூன்று நாட்கள் வழிபாடு செய்து வரவேண்டும் என்கிறது தேவி புராணம். அதன்படி; முதன் மூன்று நாட்கள் துர்க்கையை வழிபடுகிறோம்.

‘‘துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதி மசேக்ஷ ஜந்தோ;
ஸ்வஸ்தை, ஸ்ம்ருதா மதிமவ சுவாம்த தாஸி!
தாரித்ர்ய துக்கபய ஹாரிணி காத்வதன்யா
ஸர்வோபகார கரணாய ஸதார்தர சித்தா!’’
– என்று போற்றியும்.

அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவியை வழிபட வேண்டும்
‘லக்ஷ்மீம் க்ஷீரஸமுத்ர ராஜதனயாம் ஸ்ரீரங்கதாமேச
வரிம் தாஸிபூத ஸமஸ்த தேவ வனிதாம் லோகைக தீபாங்குராம்
ஸ்ரீமத் மந்த கடாக்ஷ்லப்த விபவவ்ருஹ் மேந்த்ர கங்கா
தராம் த்வாம் த்ரை லோக்ய குடும்பினீம்
ஸரஸி ஜாம் வந்தே முருந்த ப்ரியாம்!’’
– என்று போற்றியும்.

கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியை வழிபட வேண்டும்.

‘‘யாகுந் தேந்து துக்ஷார ஹார தவனா
யா சுப்ர வஸ்த ராவ்
ருதா, யா வீணா வரதண்ட மண்டிதகரா
யாச் வேத யத்மாஸனா!
யாப்ருஹ் மாச்யுத சங்கர ப்ரப்ருதிபி;
தேவை ஸ்ஸதா
பூஜிதா ஸாமாம் பாது சரஸ்வதி
பகவதி நிச்க்ஷே ஜாட்யா பஹா!’’
இப்படி, மகாதேவி, மகாலட்சுமி, மகா

சரஸ்வதி என்ற முப்பெருந்தேவியர் குறித்தான மேற்குறித்த ஸ்லோகங்களைப் பாராயணம் செய்வது நல்லது. புண்ணிய பாரதத்தில், புராதனமான ஆலயங்கள் ஏற்படுவதற்கு முந்திய காலத்தில் இந்த ஆதிபீஜாக்ஷரசக்தி 64 பீடங்களே, தெய்வீக சக்தியைப் பெறுவதற்குரிய புண்ணியத் தலங்களாக விளங்கின. அந்தக் காலத்தில் தேவர்களும், ரிஷிகளும் இந்த பீஜாக்ஷர சக்திபீட தலங்களிலேயே தங்கியிருந்து, தங்களது தவம், யோகம், மந்திரஜபம் முதலியவற்றைச் செய்து நற்பேறுகள் பல பெற்றனர். அத்தகைய பீடங்களும் இருக்கும் இடங்களையும் காண்போம்.
ஸ்ரீசக்தியின் 64 சக்தி பீடங்களும். அவை இருக்கும் இடங்களும்:

1. மாத்ரு புரம் – ரேணுகா பீடம்.
2. கொல்லாபுரம் – லட்சுமி பீடம்.
3. துளஜா புரம் – சப்த சிருங்க பீடம்.
4. இங்குளை – ஜூவாலா முகிபீடம்.
5. வாரணாசி – அன்னபூர்ணா பீடம்.
6. ரக்த தந்திரிகை – விந்த்யாசல பீடம்.
7. ரக்த தந்திரிகை – துர்கா பீடம்.
8. சாகம்பரீ – ப்ராமீரி பீடம்.
9. மதுர – மீனாட்சி பீடம்.
10. நேபாளம் – ரக்ஷய காளிபீடம்.

11. ஸ்ரீ நகரம் – சாம்புநகேச்வரி பீடம்.
12. நிலபர்வதம் – நீலாம் பரி பீடம்.
13. ஸ்ரீ சந்திரகலை – கௌசிகீ பீடம்.
14. ஸ்ரீ காஞ்சி – காமாக்ஷி பீடம்.
15. வைத்ய நாதம் – ஜ்வாலா பீடம்.
16. சைனா – நீல சரஸ்வதி பீடம்.
17. வேதாரண்யம் – ஏகாம்பர பீடம்.
18. வேதாரண்யம் – சுந்தரீ பீடம்.
19. மகா சலம் – கோகேஸ்வரி பீடம்.
20. ஹிதய பர்வதம் – மரதேவீ பீடம்.

21. மணித் வீபம் – புவனேஸ்வரி பீடம்.
22. மணித் வீபம் – திரிபுர பைரவீ பீடம்.
23. அமரேசம் – சண்டிகா பீடம்.
24. ப்ரபாஸம் – புக்ஷகரேக்ஷணி பீடம்.
25. புஷ்கரம் – காயத்ரீ பீடம்.
26. நைமி மீஷம் – தேவி பீடம்.
27. புக்ஷ்காராக்ஷம் – புருகாத பீடம்.
28. ஆக்ஷாடம் – ரதி பீடம்.
29. பார பூதி – பூதி பீடம்.
30. கண்ட முண்டம் – தண்டிணீ பீடம்.

31. நாமூலம் – நாகுலேஸ்வரி பீடம்.
32. ஸ்ரீ கிரி – சாரதா பீடம்.
33. பஞ்ச நகம் – திரிசூல பீடம்.
34. ஹரிச் சந்திரம் – சந்திரா பீடம்.
35. ஆமரத கேஸ்வரம் – ஸீக்ஷ்ம பீடம்.
36. மகா காளாஸ்தி – சாங்கீரீ பீடம்.
37. மத்யா பீதம் – சர்வாணீ பீடம்.
38. கயை – மங்களா பீடம்.
39. கேதாரம் – மார்க்க தாயினீ பீடம்.
40. பைரவம் – பைரவி பீடம்.

41. குரு க்ஷேத்திரம் – தாணுப் பிரியை பீடம்.
42. விபினா கும்ல – ஸ்வாயம் பஸி பீடம்.
43. கணகலம் – உக்ர பீடம்.
44. விமனேஸ்வரம் – விஸ்வேஸ பீடம்.
45. ஹடாஹாசம் – மதாந்தக பீடம்.
46. பீமம் – பீம பீடம்.
47. வஸ்த்ரம்பதம் – பவானி பீடம்.
48. அவமுக்தம் – விசாலாட்சி பீடம்.
49. அர்த்த கோடிகம் – ருத்ராணி பீடம்.
50. அவழுக்தம் – வராஹி பீடம்.

51. மஹாலயம் – மஹாபாகா பீடம்.
52. கோகர்ணம் – பத்ரகாளி பீடம்.
53. பத்ர கர்ணீகம் – பத்ரா பீடம்.
54. ஸ்தாணு – ஸ்தாண் வீசா பீடம்.
55. ஸ்வர்ணாக்ஷம் – உத்பலாக்ஷி பீடம்.
56. கமலாலயம் – கமலா பீடம்.
57. சக மண்டலம் – ப்ரசண்ட பீடம்.
58. மகேடெம் – மகுடேஸ்வரி பீடம்.
59. குரண்டலம் – த்ரிசந்திரிகா பீடம்.
60. மண்டீலேசம் – சரண்டகா பீடம்.

61. ஸ்தூல கேஸ்வரம் – ஸ்தூல பீடம்.
62. சங்க கர்ணம் – தீவனி பீடம்.
63. கரவஞ்சம் – காளி பீடம்.
64. ஞானிகள் இதயத்தில் – பரமேஸ்வரி பீடம்.உள்ளவர்கள்.

இந்த பூ மண்டலத்தில் 6,400-தேவி பீடங்கள் உள்ளன. இதில் 64-பீடங்கள் சிறப்பானவை என்று பீட நிர்ணய நூல்கள்’’ தெரிவிக்கின்றன. சக்தி பீடங்கள் எல்லாம் தேவர்கள், ரிஷிகள், சித்தர்கள் ஆகியோருக்கு மட்டுமே எப்போதும் பிரகாசமாகத் தெரிந்தவையாக இருக்கும். அங்கு அவர்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாமல் தவம், யோகம், ரிஷ்டை முதலியவற்றைச் செய்து கொண்டு இருப்பார்களாம். தேவியின் பீடங்கள் பற்றி பல நூல்கள் பற்பல விவரங்களையும் கருத்துக்களையும் வெவ்வேறாகத் தெரிவிக்கின்றன.

நாட்டில் உள்ள 64 சக்தி பீடத்து தேவியர்கள் அனைவரின் சக்தி அனைத்தையும் ‘காமாட்சி தேவி’யே வழங்குகிறாள் என்பது புராண ஐதீகம். இதையே அன்னை காமாட்சி தேவியை தரிசிக்கும் போது ஆதிசங்கரர் தொடுத்த ‘‘ஆனந்த லஹரி’’ ஸ்லோகத்தில் கூறப்படும் அவளது ரூபவர்ணளை சேவிக்கும் படி சௌந்தர்ய ரூபத்துடன் தரிசனமளிக்க வேண்டும்.

அதாவது, வாயில் தாம்பூலமும், கண்களில் மையும், நெற்றியில் காஷ்மீர குங்குமமும், கழுத்தில் முத்து ஹாரமும், இடுப்பில் பட்டாடையும், தங்க ஓட்டியாணமும், தங்கத் திருமேனி கொண்டு பர்வதராஜ குமாரியாக இருக்கும் தோற்றத்தை நான் எப்போதும் தரிசிக்க வேண்டும்’’ என அவர் பிரார்த்திக்கும் ஸ்லோகம் இது.

மற்றொரு ஸ்லோகம்;
‘‘முகே தே தாம்பூலம் நயநயுகவே கஜ்ஜலகலா
லலாட காஸ்மீரம் விலஸதிகலே மௌக்திகலதா
ஸ்புரத் காஞ்சீ சாடி பருது கடிதடே ஹாடகமயீ
பஜாமி த்வாம் கௌரீம் நகபதிகி சோரீம் விரதம்’’
என்று கூறுகிறது.

இப்படிப்பட்ட திவ்ய ரூபத்துடன் அன்னை காமாட்சி சாட்சி அளிக்கிறாள் என்று கூறுகின்றன காவியங்கள். அனைத்து பீட நாயகிகளின் சக்தி அனைத்தையும் காமாட்சி தேவியே வழங்குகிறாள் என்பதை விவரிக்கும் முத்துசுவாமி தீட்சதரின் கிருதி கூறுகிறது ‘‘எப்பொழுதும் சந்தோஷத்தைத் தருபவள். ஓர் எழுத்தாலும், பல வெழுத்துக்களாலும் சொல்லப்படுபவள். ஆனந்தமாக அமுத வெள்ளத்தைப் பொழியும் லோகநாயகி. மனத்தில் ஒரு நிலைப்பாட்டைத் தருபவள். செல்வங்களை அளிக்கும் ஏகாம்பரேசரின் நாயகி. ஒய்யார நடையோடு கூடியவள். லட்சுமிக்குப் பிரியமானவள். தாமரை இதழ் போன்ற அழகான அகன்ற கண்களை உடையவளுமாகிய காமாட்சியே, திரிபுரசுந்தரி! அவள் என்னைக் காக்கட்டும்!’’ என்கிறார் முத்துசுவாமி தீட்சிதர்.

இப்படி அன்னை காமாட்சியின் பெருமை அளவிடற்கரியது. கருணைக் கடலாக விளங்கும் அன்னை காமாட்சி தேவி குறித்து,கிருதயுகத்தில் 2000-ஸ்லோகங்களால் துர்வாசரும், திரேதாயுகத்தில் 1500 ஸ்லோகங்களும்ல பரசுராமரும், துவாபரயுகத்தில் 1000 ஸ்லோகங்களால் தௌம்யாச் சார்யரும், கலியுகத்தில் 500-ஸ்லோகங்களால் மூகசங்கரரும் பாடிய பெருமை அன்னை காமாட்சிக்கு உண்டு!

டி.எம்.ரத்தினவேல்

The post ஆதிபராசக்தி அருளாட்சி புரியும் 64 சக்தி பீடங்கள் appeared first on Dinakaran.

Read Entire Article