ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆணைய தலைவர் நியமனம் எஸ்சி, எஸ்டி பணியாளர் சங்கம் வரவேற்பு

3 months ago 20

சென்னை: தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வித் துறை டாக்டர் அம்பேத்கர் எஸ்சி, எஸ்டி பணியாளர் நலச்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் டி.மகிமைதாஸ், மாநில தலைவர் டி.மணிமொழி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: எங்களது பல்லாண்டு கோரிக்கையை ஏற்கும் வகையில், 2021ம் ஆண்டு முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றவுடன், தமிழக சட்டமன்றத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்திற்கு தலைவர், துணை தலைவர் மற்றும் 5 உறுப்பினர்களை நியமித்து ஆணை வெளியிட்டார்.

அத்துடன், ஆணையத்திற்கு அலுவலகமும், அண்ணாசாலையில் தனி அலுவலகமும் ஒதுக்கி, ரூ.27 லட்சத்தில் புனரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க ஆணையிட்டு, மேலும் நிதியாக ரூ.2.30 கோடியும், அலுவலர் மற்றும் பணியாளர்கள் 48 பேர் நியமிக்கப்படவும் நிதி ஒதுக்கினார். மேலும் இந்த ஆணையத்தின் முந்தைய தலைவரும், சென்னை உயர்நீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதியுமான சிவகுமார் கடந்த மே மாதம் 11ம் தேதி ஓய்வு பெற்ற நிலையில், தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி தமிழ்வாணன் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்காக முதல்வருக்கு பாராட்டு தெரிவிப்பதுடன், ஆணையத்தின் புதிய தலைவரை வாழ்த்தி, வரவேற்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

The post ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆணைய தலைவர் நியமனம் எஸ்சி, எஸ்டி பணியாளர் சங்கம் வரவேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article