‘’ஆதார், வங்கி கணக்கு விவரம் தெரிவிக்கக்கூடாது’’ இணையவழி மோசடிகள் பற்றி மக்கள் புகார் தெரிவிக்கலாம்; திருவள்ளூர் எஸ்பி தகவல்

3 months ago 11

திருவள்ளூர்: திருவள்ளூர் எஸ்பி ரா.சீனிவாசபெருமாள் அறிக்கையில் கூறியிருப்பதாவது;பெருகிவரும் இணைய வழி குற்றங்களில் டிஜிட்டல் கைது மோசடி என்பது பொதுமக்களின் வாட்ஸ்அப், வீடியோ காலில் போலியான போலீஸ் சீருடை போலீஸ் அதிகாரிகள் போன்று பேசி மோசடியில் ஈடுபடுகின்றனர். பொதுமக்களுக்கு வீடியோ கால் செய்து உங்களுடைய ஆதார் அட்டையை தவறாக பயன்படுத்தி பணம் மோசடி மற்றும் தங்கள் பெயரில் ஒரு பார்சல் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் உள்ளதாக மிரட்டுகின்றனர். உங்களுடைய வங்கி கணக்குகளில் சட்டவிரோதமாக பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. தாங்கள் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டு உள்ளீர்கள் என்ற பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி தங்கள் மீது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறி அதை உறுதி செய்யும்விதமாக போலியான கைது வாரண்ட்டின் நகல் ஒன்றை வாட்ஸ் அப்பில் அனுப்புவார்கள்.

உங்களை ஆன்லைன் வீடியோ கால் விசாரணைக்கு உட்படுத்தி உங்களைப் பற்றிய விவரங்களை பெற்றுக் கொண்டு உங்களுக்கு எச்சரிக்கை மிரட்டல் விடுத்து தங்கள் வங்கியில் உள்ள பணத்தை அவர்கள் கொடுக்கும் வங்கி கணக்கிற்கு அனுப்புமாறு கூறுவார்கள். பின்னர் அந்த பணத்தை சரிபார்த்து விசாரணை முடிந்த பிறகு தங்களுடைய பணத்தை திருப்பி அனுப்பி விடுவதாக கூறி அப்பாவி மக்களை ஏமாற்றி பொது மக்களின் பணத்தை மோசடி செய்து வருகின்றனர். பண மோசடி அழைப்புகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பாக போலீஸ் அதிகாரிகள் யாரும் ஒருவருடைய வங்கி கணக்கில் உள்ள பணத்தை அவர்கள் கூறும் வங்கி கணக்குக்கு அனுப்புமாறு கேட்க மாட்டார்கள்.

அவ்வாறு கேட்டால் அதனை தவிர்த்து உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தை அணுகி உதவி பெற வேண்டும். உண்மை தன்மையை சரி பார்க்காமல் தனிப்பட்ட தகவல்களான ஆதார் அட்டை, வங்கி கணக்கு விவரம், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்றவற்றை ஒரு போதும் பகிரக்கூடாது. வங்கி பெயரில் வாட்ஸ் அப்பில் வரும் குறுஞ்செய்திகளை நம்பி உங்களுடைய விவரங்களை பகிரவேண்டாம். உங்கள் வங்கி கணக்குகளை மற்றவர்கள் இயக்க அனுமதிப்பதை தவிர்க்க வேண்டும்.

ஏனெனில் சட்ட விரோதமான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படலாம். அறியப்படாத செயலிகளை பதிவிறக்கமோ அல்லது அன்னியர்கள் அனுப்பியதை சந்தேகத்திற்கு இடமான லிங்க்கை கிளிக் செய்யவோ வேண்டாம். இணையதளத்தில் யாரேனும் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி முன்பணம் கேட்டால் அவர்கள் குறித்து உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். இணைய வழி மோசடிகள் குறித்த புகார் அளிக்க 1930 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மேலும் www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post ‘’ஆதார், வங்கி கணக்கு விவரம் தெரிவிக்கக்கூடாது’’ இணையவழி மோசடிகள் பற்றி மக்கள் புகார் தெரிவிக்கலாம்; திருவள்ளூர் எஸ்பி தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article