கருப்பூரம் நாறுமோ
கமலப்பூ நாறுமோ,
திருப்பவளச் செவ்வாய்தான்
தித்தித்தி ருக்குமோ,
மருப்பொசித்த மாதவன்றன்
வாய்ச்சுவையும் நாற்றமும்,
விருப்புற்றுக் கேட்கின்றேன்
சொல்லாழி வெண்சங்கே!
பகவானுடைய மூச்சுக் காற்றாக பரிமளமாக இருக்கக் கூடியதே வேதம். அவனே திருவாய் மலர்ந்து சொல்லக் கூடிய திருமந்திரம், த்வயம், சரம ஸ்லோகம் முதலான உபதேசங்கள் என்று இந்த இரண்டையும் பக்கத்திலேயே இருந்து அனுபவிக்கக் கூடியவன் யாரெனில், அது சங்காழ்வான். இதை அனுபவிக்கக் கூடியதனாலோ என்னவோ… அவன் செய்யக் கூடிய நாதமே பிரணவநாதமாக இருக்கிறது. பகவானுடைய மூச்சுக் காற்றான மணம் வீசக் கூடிய வேதத்தையும் அவன் அனுபவிக்கிறான். பகவான் சொல்லக்கூடிய சுவை மிகுந்த அஷ்டாக்ஷ்ரம் முதலிய உபதேசங்களையும் அனுபவிப்பதால், சங்காழ்வான் தானே நாத சொரூபமாக இருந்து… இந்த வேதமும் அஷ்டாக்ஷ்ரம் நமக்கு காண்பிக்கக் கூடிய விஷயத்தை, சங்காழ்வான் பிரணவ நாதம் மூலமாக நமக்கு வெளிப்படுத்திக் காண்பிக்கிறான்.
பகவான் சூட்சுமமான விஷயங்களையெல்லாம் அவன் கேட்பதனால், சங்காழ்வானுடைய ஓசை பிரணவநாதமாக இருக்கு என்று பார்த்தோம். அந்தப் பிரணவ நாதம் ஏன், துஷ்டர்களுக்கு பயத்தையும் பக்தர்களுக்கு மகிழ்ச்சியையும் தருகின்றது என்று பார்த்தால், அந்தப் பிரணவ நாதம் அஞ்ஞானத்தை விலக்கி ஞானத்தை கொடுக்கக்கூடியது. அதனால்தான், பாஞ்ச சன்னியத்தை எடுத்து பகவான் ஊதியவுடனே, துஷ்டர்களின் இருதயம் பிளந்து போகிறது. பக்தர்களுடைய இருதய பத்மம், இருதய தாமரை மலர்கிறது. இது சங்காழ்வானின் பிரணவ நாதத்தினால் நடக்கின்றது. ஏன் நடக்கிறது என்று பார்த்தால், பகவான் அவனை கையில் வைத்திருப்பதாலும், அவனை திருவாயில் வைத்து ஊதுவதாலும் அந்த வாய்ச்சுவையையும் நாற்றத்தையும் அவன் அனுபவிக்கிறான். வாய்ச் சுவையாகவும் நாற்றமாகவும் இருக்கக்கூடிய வேதத்தையும், பகவான் திருவாய் மலர்ந்து சொன்ன உபதேசங்களையும் நேரடியாக அனுபவிக்கக்கூடிய நிலையில் சங்காழ்வான் இருக்கின்றான்.
அதனாலேயே… ஆண்டாள் இந்த இடத்தில், ‘‘நாம் இந்த விஷயத்தைக் கேட்க வேண்டும்… என்று சொல்லி மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச் சுவையும் நாற்றமும் ….’’ இங்கு கொஞ்சம் கவனிக்க வேண்டும். முதலில் எப்படி தொடங்கினாள் என்று பாருங்கள். கற்பூரம் நாறுமோ… கமலப் பூ நாறுமோ… திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ … என்று பார்த்தோம். இங்கு மணத்தைச் சொல்லிவிட்டு திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ… என்று சுவையைச் சொன்னாள். இப்போது சங்காழ்வானிடம் கேட்கும்போது மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும், என்று சுவையைச் சொல்லிவிட்டு மணத்தைச் சொல்கிறாள். முதல் வாக்கியத்தில் மணத்தைச் சொல்லிவிட்டு சுவையைச் சொன்னாள். இதில் வெளிப்படையாக சொல்லக் கூடிய விஷயம் என்னவெனில், முதலில் சொல்லப்பட்ட விஷயம் அனுபவத்திற்கு முன்னால் சொன்னது. பின்னால் சொன்ன விஷயம் அனுபவத்திற்குப் பின்னால் சொன்னது என்று சொல்வது வழக்கம். மீண்டும் கவனியுங்கள்.
இங்கு வெகுவெகு சூட்சுமமாக ஆண்டாள் ஒரு தரிசனத்தையே காட்டுகிறாள். அனுபவம் ஆரம்பிப்பதற்கு முன்னால், திருவாயினுடைய பரிமளம் எப்படியிருக்கும். திருவாயினுடைய சுவை எப்படியிருக்கும் என்று முன்னால் கேட்கப்பட்டது. ஆனால், அனுபவம் ஆனதற்குப் பின்னால், அந்தச் சுவைதான் முதலில் மனதில் இருக்கிறது. அதற்குப் பிறகுதான் அந்தச் சுவையின் மணம் வருகின்றது. உதாரணமாக, ஒரு இனிப்பை புசித்து முடித்த பின்பு, முதலில் நாம் எதைப்பற்றிப் பேசுவோமெனில் முதலில் அதன் சுவையைப் பற்றித்தான் பேசுவோம். சாப்பிட்டு முடித்த பின்பு, அந்த இனிப்பு மிகமிக மணமாக இருந்தது என்று சொல்ல மாட்டோம். முதலில் சுவையைச் சொல்லிவிட்டு அதற்குப் பிறகுதான் மணத்தைச் சொல்வோம். இங்கு மணம் என்பது பகவானின் மூச்சுக்காற்றாக இருக்கக்கூடிய வேதமென்று பார்த்தோம். சுவை என்பது அவன் திருவாய் மலர்ந்து அருளிய அஷ்டாக்ஷ்ரம், த்வயம், சரம உபதேசங்கள் என்று பார்த்தோம்.
முதலில் இந்த பக்தன் ஆச்சார்ய சம்மந்தம் பெற்று பகவானை அடையும்போது, ஆச்சார்யன் அவனுக்கு தத்து வார்த்தங்களை உபதேசித்து… வேத வேதாந்தங்களையெல்லாம் உபதேசிக்கிறார். அப்படி உபதேசித்ததை அவன் உள்வாங்கிக் கொள்கிறான். ஆனாலும், அவனுக்கு இன்னும் அதில் தெளிவடையாது இருக்கிறான். அப்போது ஆச்சார்யன் அவனை அருகே அழைத்து திருமந்திரம், த்வயம், சரம ஸ்லோகம் முதலான உபதேசங்களை ஆச்சார்யன் அவனுக்கு கொடுக்கிறார். அப்போது என்ன ஆகிறதெனில், முதலில் மணம் அதற்குப் பிறகு சுவை. இப்போது மீண்டும் திருமந்திரம், த்வயம், சரம ஸ்லோகம் முதலான உபதேசங்களை அனுசந்தானம் செய்யச் சொல்கிறார். அப்படி இந்த பக்தனானவன் அனுசந்தானம் செய்து கொண்டே வரும்போது அது உள்ளே சென்று அனுபவமாகி, அவன் முதன் முதலாக கேட்ட வேத வேதாந்த விஷயங்கள் புரியும்படியாகச் செய்கிறது. இதுதான் மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்… இப்போது பாருங்கள் சுவை முதலில் வந்து பிறகு மணத்தைச் சொல்கிறாள்.
பக்தனுக்குள் பெரிய மாற்றம் ஏற்பட்டிருப்பதை இந்த பாசுர வாக்கியம் காட்டுகின்றது. விருப்புற்றுக் கேட்கின்றேன்… சொல்லாழி வெண் சங்கே… அதாவது, இந்த விஷயங்களை எல்லாம் நான் எப்படிக் கேட்கிறேன் எனில், ஏதோ நான் வந்து தெரிந்து கொள்ள வேண்டுமென்றோ; அல்லது அறிந்து கொள்ள வேண்டுமென்கிற அறிவு நிலையில் கேட்கவில்லை. விருப்புற்றுக் கேட்கின்றேன். என்னால் இதை அறியாமல் இருக்க முடியாது. இது இல்லாமல் என்னால் இருக்கவே முடியாது என்கிற வேட்கையோடு… பக்தியினுடைய உச்சத்தில் விருப்புற்று இதைக் கேட்கின்றேன். (The complete attention and listening) சொல்லாழி வெண் சங்கே… என்கிறாள். சரி, இப்போது மீண்டும் இங்கு மருப்பொசித்த மாதவன்தன் என்கிற பாசுர வார்த்தையை கவனிப்போம். இந்த மருப்பொசித்த இந்த வார்த்தையின் பின்னால் பெரும் வரலாறே அடங்கி இருக்கிறது. குவலயா பீடம் என்கிற யானையை கிருஷ்ணன் வதம் செய்தார்.
கம்ஸ வதம் நிகழ்வதற்கு முன்னால் குவலயா பீடம் என்கிற யானையின் தந்தங்களை முறித்து யானையை சம்ஹரித்தார். இந்த வரலாற்றைத்தான் ஆண்டாள் இங்கு மருப்பொசித்த என்கிற ஒரு வார்த்தையில் உணர்த்துகிறாள். அது சரி, குவலயா பீடமென்கிற யானையை சம்ஹாரம் செய்த வரலாற்றை மருப்பொசித்த என்று இங்கு ஏன் குறிப்பிட வேண்டும். நமக்கு நன்றாகத் தெரியும். ஆண்டாள் எம்பெருமானைப் பாடினாலும், ரொம்பவும் விருப்பமாக பாடக்கூடிய க்ஷேத்ரம் ரங்கம். அதேபோன்று ஆண்டாள் விருப்புற்று பாடக்கூடிய அவதாரம் கிருஷ்ணாவதாரம். ஆண்டாள் எல்லா க்ஷேத்ரங்களையும் பாடியிருந்தாலும் கடைசியாகச் சென்று ஐக்கியமான இடம் எங்கேயெனில் அது ஸ்ரீரங்கம்தான். அந்த மகாக்ஷேத்ரம்தான் ஆண்டாளுக்கு முக்கியமானது. அதேபோல எல்லா அவதாரங்களையும்பற்றி ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி… என்று பாடினாலும் சரிதான். ராமனைப் பற்றி பாடினாலும் சரிதான்… கிருஷ்ணாவதாரத்தில் இருக்கக்கூடிய அந்த அனுபவத்தைத்தான் ரொம்பவும் அதிகமாக பாடினாள்.
(தொடரும்)
ஸ்ரீதத்தாத்ரேய சுவாமிகள்
The post ஆண்டாள் அருளிய அமுதம் -பகுதி 3 appeared first on Dinakaran.