தண்டராம்பட்டு, ஜூலை 10: தண்டராம்பட்டு அருகே சாலையோர பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் 5 பேர் படுகாயம் அடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த வேப்பூர்செக்கடி கிராமத்தை சேர்ந்தவர்கள் பள்ளி மாணவர்கள் மருதேஷ்(14), ரூபி(14), பரத்(16), விஷால்(15). இவர்கள் 4 பேரும் நேற்று மதியம் தானிப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த தேர்வை எழுதுவதற்காக கிராமத்தில் இருந்து ராஜூ(36) என்பவரது ஆட்டோவில் சென்றனர். தொடர்ந்து, தானிப்பாடி அருகே பெருமாள் கோயில் வனப்பகுதியில் வந்து கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் மற்றும் 4 மாணவர்களும் படுகாயம் அடைந்தனர்.
அவ்வழியாக வந்த பொதுமக்கள் இதுகுறித்து தானிப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் படுகாயம் அடைந்த 5 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தானிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அவர்கள் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தானிப்பாடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், தகவலறிந்த செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்று வரும் மாணவர்களிடம் நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.
The post ஆட்டோ கவிழ்ந்து 4 மாணவர்கள் படுகாயம் எம்எல்ஏ நலம் விசாரித்தார் தண்டராம்பட்டு அருகே சாலையோர பள்ளத்தில் appeared first on Dinakaran.