ஆட்சியைக் குறை சொல்ல முடியாததால் அவதூறு சேற்றை வீசுகிறார்கள் அரசின் சாதனைகளை ஒவ்வொரு வீடாகச் சென்று முழங்கிடுவோம்: தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

1 week ago 3

சென்னை: ஆட்சியைக் குறை சொல்ல முடியாததால் அவதூறு சேற்றை வீசுகிறார்கள், அரசின் சாதனைகளை ஒவ்வொரு வீடாகச் சென்று முழங்கிடுவோம் என தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய மடலில் கூறியிருப்பதாவது: ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ எனப் பதவியேற்பு உறுதிமொழி ஏற்று, இந்த மே மாதம் 7ம் நாளுடன் நான்காண்டுகள் நிறைவடைந்து, ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது உங்களில் ஒருவனான என் தலைமையிலான நமது திராவிட மாடல் அரசு.

2021 சட்டமன்றத் தேர்தலின் போது திராவிட முன்னேற்றக் கழகம் அளித்த 505 வாக்குறுதிகளில் பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இன்னும் நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகளும் இருப்பதை நான் மறக்கவுமில்லை, மறுக்கவுமில்லை. அவற்றையும் நிறைவேற்றிட வேண்டும் என்பதில் உறுதியாகவே இருக்கிறேன். அதற்கு நீங்கள் அனைவரும், உங்களில் ஒருவனான எனக்கு உறுதுணையாக இருந்திட வேண்டும்.

தமிழ்நாட்டில் 1,244 இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கும் சொற்பொழிவாளர்கள் நான்காண்டு கால திராவிட மாடல் அரசின் ஆட்சியின் சாதனைகளையும்; அதனால் மக்கள் பெற்றுள்ள பயன்களையும் ஒவ்வொரு இடத்திலும் எடுத்துரைக்க வேண்டும். இந்தியாவுக்கே முன்னோடியாக விளங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணத் திட்டம், காலை உணவுத் திட்டம், நான் முதல்வன் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் போன்ற முத்திரைத் திட்டங்களால் மக்கள் பெற்றுள்ள நன்மைகளைப் புள்ளிவிவரங்களுடன் எடுத்துரைப்பது அவசியமாகும்.

நீண்ட நேரம் உரையாற்ற வேண்டிய கட்டாயமில்லை. எளிமையாக இனிமையாக சுருக்கமாக கேட்பவரைக் கவர்கின்ற வகையில் எடுத்துரைத்தாலே திராவிட மாடல் அரசின் திட்டத்தால் பயன் பெற்றுள்ள தமிழ்நாட்டு மக்கள் அதனைப் புரிந்துகொள்வார்கள். கழகப் பேச்சாளர்கள் அவரவருக்குரிய பாணியில் நல்ல முறையில் கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும். நம்மை எதிர்ப்பவர்கள் தங்கள் மேடைகளில் பொய்யாக மோசமாக ஆபாசமாக – அருவருப்பாகப் பேசினாலும், நமது பேச்சாளர்கள் கண்ணியக்குறைவான சொற்களைப் பயன்படுத்திடக் கூடாது என்பதை அறிவுறுத்தலாகவும் கட்டளையாகவும் தெரிவிக்கிறேன்.

சமூக வலைத்தளங்களிலும் பாக முகவர்களும், பூத் கமிட்டி உறுப்பினர்களும், கழகத்தின் மற்ற நிர்வாகிகளும் முனைப்புடன் செயல்பட வேண்டும். ஒரு மணி நேரப் பேச்சைவிட, ஒரு நிமிட – அரை நிமிடக் காணொலிகள், ரீல்ஸ்கள்தான் லட்சக்கணக்கானவர்களிடம் உடனடியாகப் போய்ச் சேர்கின்றன. சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்துத் தமிழ்நாட்டுக்கு துரோகமிழைப்பவர்களும், அவர்களின் மறைமுகக் கூட்டாளிகளும் தி.மு.க.வை வீழ்த்திவிட முடியாதா எனத் தொடர் தோல்வியின் ஆற்றாமையில் தவிக்கிறார்கள்.

அவர்களின் மனக்கணக்கு தப்புக்கணக்காகவே முடியும் என்பதைச் சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் போடுகிற கணக்கு தீர்மானிக்கும். நாம் மக்களிடம் செல்வோம். அவர்களுக்காக அரசு செய்ததைச் சொல்வோம். தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் அவற்றை எடுத்துரைப்போம். சொற்பொழிவாளர்களின் கருத்துகளை உள்வாங்கி, கழக அரசின் சாதனைகளை ஒவ்வொரு வீடாகச் சென்று முழங்கிடுவோம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் கூறியுள்ளார்.

* நாம் மக்களிடம் செல்வோம். அவர்களுக்காக அரசு செய்ததைச் சொல்வோம். தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் அவற்றை எடுத்துரைப்போம்.

The post ஆட்சியைக் குறை சொல்ல முடியாததால் அவதூறு சேற்றை வீசுகிறார்கள் அரசின் சாதனைகளை ஒவ்வொரு வீடாகச் சென்று முழங்கிடுவோம்: தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Read Entire Article